ஊழல் ஆதாரங்களை வெளியிட்டால் சித்தராமையா நடவடிக்கை எடுப்பாரா?- குமாரசாமி கேள்வி


ஊழல் ஆதாரங்களை வெளியிட்டால் சித்தராமையா நடவடிக்கை எடுப்பாரா?- குமாரசாமி கேள்வி
x

காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஊழல் ஆதாரங்களை வெளியிட்டால் முதல்-மந்திரி சித்தராமையா நடவடிக்கை எடுப்பாரா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:-

மருத்துவ பரிசோதனை

சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு ஜனதாதளம்(எஸ்) அலுவலகத்தில் நடந்த விழாவில் குமாரசாமி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கன்னட திரைத்துறையில் சமீபகாலமாக 'பான் இந்தியா' திரைப்படங்கள் அதிகரித்துள்ளன. முதல்பாகம், இரண்டாம் பாகம் என்றெல்லாம் படங்கள் வருகின்றன. அதேபோல் இந்த காங்கிரஸ் அரசின் ஊழல்களும் ஒவ்வொன்றாக வருகின்றன. சினிமா என்றால் இதற்கு முடிவு இருக்க வேண்டும். நாடகம் என்றாலும் அதற்கு முடிவு இருந்தே தீர வேண்டும். அதே போல் இந்த காங்கிரஸ் அரசின் ஊழல்களுக்கும் இறுதி முடிவு வரும்.

எனக்கு புத்திகெட்டுவிட்டதாக காங்கிரசார் சிலர் சொல்கிறார்கள். என்னை பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டாம். எங்கள் குடும்பத்தில் அதிகளவில் டாக்டர்கள் உள்ளனர். இன்னொருவரிடம் இருந்து நான் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு புத்தி கெட்டு இருந்தால் நான் மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறேன். ஆனால் வாக்களித்த வாக்காளர்களை ஏமாற்றும் வகையில் இவர்கள் ஊழல்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சித்தராமையா சொல்கிறார்

இத்தகைய மோசமான அரசு இதற்கு முன்பு இருக்கவில்லை. என்னிடம் சிலருக்கு எதிராக ஊழலுக்கான ஆதாரம் உள்ளது. அதை வெளியிட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது முதல்-மந்திரி சித்தராமையா நடவடிக்கை எடுப்பாரா?. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் புகாரை காண்டிராக்டர்கள் கூறினர். இந்த அரசு மீதும் அவர்கள் குறை கூறினர். ஆனால் திடீரென அவர்கள் தங்களின் கருத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.

மனிதர்களாக இருப்பவர்கள் உறுதியுடன் தைரியமாக பேச வேண்டும். என்னை காண்டிராக்டர்கள் சந்தித்து தங்களின் கஷ்டங்களை கூறினர். அவர்களுக்கு நான் குரல் கொடுப்பதாக உறுதியளித்தேன். அரசியலும் சினிமா போல் மாறிவிட்டது. நான் 'ஹிட் அன்டு ரன்' என்று சித்தராமையா சொல்கிறார். என்னிடம் இருப்பது காலி 'பென் டிரைவ்' அல்ல. மந்திரி செலுவராயசாமிக்கு எதிராக கவர்னருக்கு எழுதிய கடிதத்தை போலி என்று கூறிவிட்டனர். இவ்வாறு கூறுபவர்களை நம்பி நான் எப்படி ஆதாரங்களை வெளியிட முடியும்?.

பொறுத்திருந்து பார்க்கலாம்

சித்தராமையா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அரசுக்கு எதிராக எத்தனை ஆதாரங்களை வெளியிட்டார்?. ஒன்றை கூட அவர் வெளியிடவில்லை. உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியதாக சித்தராமையா அடிக்கடி பெருமையாக சொல்லிக்கொள்கிறார். அதற்கு தேவையான பணத்தை காங்கிரசிடம் இருந்தோ அல்லது அவரது வீட்டில் இருந்து எடுத்து வந்து செலவு செய்கிறாரா?.

ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல. அதற்கு நிச்சயம் முடிவு இருக்கிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேச நான் அவர்களின் அடியாள் கிடையாது. நான் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருகிறேன். காவிரி நீர் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. கோர்ட்டு என்ன சொல்கிறதோ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பெங்களூரு மாநகராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த ஆவணங்களை இன்னும் 2 நாட்களில் வெளியிடுவேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்த விழாவில் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான டி.ஏ.ஷரவணா உள்பட பலர் கலந்துெகாண்டனர்.


Next Story