உடற்பயிற்சி கருவியால் தாக்கி பெண் கொலை


உடற்பயிற்சி கருவியால் தாக்கி பெண் கொலை
x

ராமமூர்த்தி நகரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் உடற்பயிற்சி கருவியால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:-

கள்ளத்தொடர்பு

பெங்களூரு ராமமூர்த்திநகர் பகுதியை சேர்ந்தவர் மோரிஸ். இவருக்கும் லிடியா என்ற பெண்ணுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மோரிஸ், அந்த பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு வந்தார். இந்த நிலையில் தனது வீட்டின் 3-வது மாடியில் குடியிருந்த அவர், மற்ற மாடியில் இருந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த சில மாதங்களாக மோரிசுக்கு, லிடியா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவர் வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக மோரிஸ் சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து அவர் தனது மனைவியிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே இதுகுறித்து தகராறு ஏற்பட்டது.

கொலை

அப்போது இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்கள் சண்டை போடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமமூர்த்தி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது லிடியா, வீட்டின் ஒரு அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், தகராறு ஏற்பட்டதும், அப்போது ஆத்திரத்தில் மோரிஸ், வீட்டில் இருந்த உடற்பயிற்சி கருவியால் தாக்கி லிடியாவை கொலை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து மோரிசை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story