2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை- ெபண் குழந்தை சாவு; சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
குடிபோதையில் கணவர் தகராறு செய்ததால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார். இதில் பெண் குழந்தை உயிரிழந்தது. மேலும் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோலார் தங்கவயல்:
தகராறு
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா சிக்கபத்யகட்டா கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபாலா. இவரது மனைவி காவ்யா (வயது 25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நிகில் (5) என்ற மகனும், ஜார்வியா (3) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மேலும், வேணுகோபாலா தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் காவ்யா மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினமும் இரவும் வேணுகோபாலா மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதும் கணவன்-மனைவி இடையே விடிய, விடிய தகராறு நடந்துள்ளது. இதையடுத்து வேணுகோபாலா வெளியே சென்றுவிட்டார். கணவர் தினமும் குடிபோதையில் வந்து தகராறு செய்வதால் மனமுடைந்த காவ்யா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். மேலும் தனது குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து செல்ல திட்டம் தீட்டினார்.
அதன்படி, நேற்று காலை தனது குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்துவிட்டு பின்னர் தானும் விஷம் குடித்தார். இந்த நிலையில் காவ்யா உள்பட 3 பேரும் வீட்டில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முல்பாகல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், காவ்யாவும், ஜார்ஜியாவும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் நிகிலுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முல்பாகல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் தினமும் குடிபோதையில் தகராறு செய்து வந்ததால் மனமுடைந்து காவ்யா, மகன்-மகளுடன் விஷம் குடித்ததும், அதில் காவ்யாவும், அவரது மகளும் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து முல்பாகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.