பெங்களூரு அருகே ஏரியில் குதித்து மகளுடன், பெண் தற்கொலை
கும்பலகோடு:-
பெங்களூரு அருகே கும்பலகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பட்டண பாளையா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கீதா (வயது 32). இந்த தம்பதிக்கு 13 வயதில் பாவனா என்ற மகள் இருந்தாள். நாகராஜ் தொழிலாளி ஆவார். நேற்று முன்தினம் இரவு தம்பதி, மகள் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கினார்கள். நேற்று அதிகாலையில் எழுந்த கீதா தனது மகள் பாவனாவை அழைத்து கொண்டு கும்பலகோடு அருகே உள்ள பீமனகுப்பே ஏரிக்குசென்றார். அங்கு தனது மகள் பாவனாவுடன் ஏரியில் குதித்து கீதா தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கிராம மக்கள் கும்பலகோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து ஏரியில் இருந்து கீதா, அவரது மகள் பாவனாவின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள். கீதா என்ன காரணத்திற்காக தனது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவை கீதா எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.