மகன், மகளை கொன்று குளத்தில் குதித்து பெண் தற்கொலை


மகன், மகளை கொன்று குளத்தில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 Dec 2022 3:00 AM IST (Updated: 17 Dec 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்காவில் மகன், மகளை கொன்று குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சிக்கமகளூரு:-

தகராறு

சித்ரதுர்கா தாலுகா இரேஹள்ளியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. இவரது மனைவி துர்கம்மா (வயது 25). இந்த தம்பதியின் மகன் அஜய் (6), மகள் ஷெவந்தி (4). இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் மல்லிகார்ஜுனா தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு நாயக்கனஹட்டி கிராமத்தில் உள்ள பெரிய குளத்துக்கு சுற்றுலா வந்தனர். அப்போது அங்கு வைத்தும், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் துர்கம்மா மனமுடைந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் திடீரென்று 2 குழந்தைகளையும் குளத்தில் வீசிவிட்டு துர்கம்மாவும் குளத்துக்குள் குதித்தார். இதனை பார்த்து மல்லிகார்ஜுனாவும், அந்தப்பகுதியில் இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனாலும் அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து நாயக்கனஹட்டி போலீசாரும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் குளத்தில் மூழ்கிய 3 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு துர்கம்மா பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் 2 குழந்தைகளை மீட்க முடியவில்லை. இதனால் அந்த குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

2 குழந்தைகளின் உடலையும் தீயணைப்பு படையினர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதையடுத்து போலீசார், துர்கம்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு துர்கம்மாவும் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாயக்கனஹட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story