சார்மடி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து பெண் சாவு


சார்மடி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து பெண் சாவு
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெல்தங்கடி அருகே சார்மடி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து பெண் உயிரிழந்தார். கிராம பஞ்சாயத்து தலைவி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

மங்களூரு-

பெல்தங்கடி அருகே சார்மடி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து பெண் உயிரிழந்தார். கிராம பஞ்சாயத்து தலைவி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பெல்தங்கடி தாலுகா உஜிரே கிராம பஞ்சாயத்து தலைவி புஷ்பாவதி. இவரது மகள் பூர்ணிமா. பூர்ணிமாவுக்கு சம்ருத், சாக்சி ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் இறந்த உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க புஷ்பாவதி, பூர்ணிமா, குழந்தைகள் மற்றும் உறவினர் சரோஜினி சென்றனர். பின்னர் இறுதி சடங்கு முடிந்த பிறகு அவர்கள் 5 பேரும் உஜிரே நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அருண் என்பவர் ஓட்டினார்.

அந்த கார், நேற்று முன்தினம் இரவு சார்மடி மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அருணின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெண் சாவு

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளிளில் சிக்கி புஷ்பாவதி, சரோஜினி, டிரைவர் அருண், குழந்தைகள் மற்றும் பூர்ணிமா ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்தங்கடி போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சரோஜினி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டிரைவருக்கு அறிவுரை

சார்மடி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. மலைப்பாதையில் 50-க்கும் மேற்பட்ட வளைவுகள் இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன.

இதனால் மலைப்பாதையில் அனுபவமுள்ள டிரைவர்களே ஓட்ட வேண்டும். வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.


Next Story