குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல பெண்: பத்ருதீன் பேச்சுக்கு அசாம் முதல்-மந்திரி பதில்


குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல பெண்: பத்ருதீன் பேச்சுக்கு அசாம் முதல்-மந்திரி பதில்
x

பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல என பத்ருதீன் பேச்சுக்கு அசாம் முதல்-மந்திரி பதிலளித்து உள்ளார்.


கவுகாத்தி,


பா.ஜ.க.வின் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் சமீபத்தில் பேசும்போது இந்து சமூகம் பற்றி குறிப்பிட்டார்.

இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கு பிறகு அவர்கள் பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்கிறார்கள். எனவே, அவர்கள் குழந்தைகளை பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? வளமான நிலத்தில் விதைத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

அப்போதுதான் வளர்ச்சி ஏற்படும். இந்துக்களும் முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும், பிறகு பாருங்கள். எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற வகையில் கூறினார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் அசாமில் பொங்காய்காவன் நகரில் முதல்-மந்திரி பிஸ்வா சர்மா பேசும்போது, பெண்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு குழந்தைகளை தொடர்ந்து பெற்றெடுக்க வேண்டும் என பத்ருதீன் கூறுகிறார்.

ஆனால், நான் என்ன கூற வருகிறேன் என்றால், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பெண்கள் பெற்றெடுத்தால், அந்த குழந்தைகளை பத்ருதீன் நன்றாக ஊட்டி வளர்த்து, அவர்களுக்கான செலவுகளுக்கும் பணம் தரவேண்டும் என பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து, நீங்கள் பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.

ஒரு பெண் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். நம்முடைய சமூகத்திற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும். அதன்பின்பு, அசாம் அழிந்து விடும். பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல.

வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார் என அவர் கூறியுள்ளார்.


Next Story