கபடி போட்டியின் போது காயமடைந்த வீராங்கனை உயிரிழப்பு
கபடி போட்டியின் போது வீராங்கனை சாந்தி மாதவிக்கு காயம் ஏற்பட்டது.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் சத்தீஸ்காரியா ஒலிம்பிக்ஸ் என்ற பெயரில் மாநில அரசு சார்பில் கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், அம்மாநிலத்தின் கொண்டஹன் மாவட்டம் மஜ்ஹிபொரண்ட் பகுதியில் நேற்று பெண்கள் கபடி போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் சாந்தி மாதவி என்ற வீராங்கனையும் பங்கேற்றார்.
போட்டியின் போது சாந்தி மாதவிக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடந்து அவர் மக்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாஹல் உயிரிழந்த கபடி வீராங்கனை சாந்தியின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.