ஆன்லைனில் ரூ. 1,169-க்கு 6 துண்டு வாங்கி ரூ. 8.30 லட்சம் இழந்த பெண் - நூதன மோசடி
ஆன்லைனில் 6 துண்டு (டவல்) ஆர்டர் செய்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா சாலை பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆன்லைனில் 6 துண்டு (டவல்) ஆர்டர் செய்துள்ளார். 6 துண்டுக்கான விலையான 1 ஆயிரத்து 168 ரூபாயை ஆன்லைனில் செலுத்தியுள்ளார்.
ஆனால், 1 ஆயிரத்து 169 ரூபாய்க்கு பதிலாக அந்த மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து 19 ஆயிரத்து 5 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி தன் வங்கி கணக்கில் இருந்து கூடுதலாக பணம் எடுக்கப்பட்டது குறித்து வங்கிக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார்.
அவர் வங்கியை தொடர்பு கொண்ட சில நிமிடங்கள் கழித்து அவரது செல்போன் எண்ணுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக ஒரு நபர் போன் செய்துள்ளார். மேலும், அதிகமாக எடுக்கப்பட்ட பணத்தை திரும்பப்பெற (refund - ரீபண்ட்) ஓரு செயலியை (ஆப் - An App) டவுண்டோடு செய்யும்படி கூறியுள்ளார்.
தன்னிடம் வங்கி அதிகாரி தான் பேசுவதாக எண்ணிய அந்த மூதாட்டி அந்த நபர் கூறியதுபோல அந்த குறிப்பிட்ட செயலியை தனது செல்போனில் டவுண்டோடு செய்துள்ளார்.
அந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்த உடனேயே அந்த மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
போலீஸ் நிலையம் செல்வதற்குள் அந்த மூதாட்டின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் அந்த மூதாட்டி புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்படையின் மூதாட்டியிடம் நூதன மோசடியில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளதால் அந்த நபர் யார் என்பது குறித்தும் பறிபோன 8.30 லட்ச ரூபாயை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்லைனில் 1 ஆயிரத்து 169 ரூபாய்க்கு துண்டு வாங்கிய மூதாட்டி 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.