பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு தீவைத்த மர்மநபர்கள்


பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு தீவைத்த மர்மநபர்கள்
x

அரக்கல்கோடு அருகே பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு மர்மநபர்கள் தீவைத்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:-

பெண் சப்-இன்ஸ்பெக்டர்

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா கொனனூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷோபா. ஜவகல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஷோபா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொனனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் கொனனூர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷோபா, தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.

தீவைப்பு

அந்த சமயத்தில் அவரது வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தனர். இதனால், அவரது வீட்டில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதில், மடிக்கணினி, துணிகள் என ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து கொனனூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரக்கல்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரகுபதி, கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.

பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு தீவைத்தது யார்? எதற்காக தீவைத்தனர்? என்பது குறித்து கொனனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story