லிப்ட் கேட்டு காரில் ஏறிய கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்..!
காரை ஓட்டி வந்த நபர் காருக்குள் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
லக்னோ,
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
உத்தரபிரதேசத்தின் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில், பொறியியல் மாணவி ஒருவர் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்டு கால்வாய் அருகே தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 23 வயதான மாணவி ஒருவர் பிடெக் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை கல்லூரி வகுப்புகளை முடித்து கொண்டு அவர் வீடு திரும்ப தாமதமாகிவிட்டதால், சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் லிப்ட் கேட்டுள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கார் அவரை ஏற்றிச் செல்வதற்காக நின்றது. அதன் பின் அந்த மாணவி அந்த காரில் ஏறிச் சென்றுள்ளார். இந்த நிலையில், கார் சிறிது டூரம் சென்ற பின், காரை ஓட்டி வந்த நபர் காருக்குள் வைத்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பின், மயக்க நிலையில் இருந்த அந்த மாணவியை அந்த நபர் கால்வாய் அருகே தூக்கி வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி, நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
உடனே இச்சம்பவம் குறித்து போலீசிடம் புகாரளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, முதன்மை விசாரணைக்குப் பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.