சிக்கமகளூரு அருகே குடும்பத்தகராறில் பயங்கரம் நாட்டு துப்பாக்கியால் சுட்டு பெண் கொலை; கணவர் கைது


சிக்கமகளூரு அருகே குடும்பத்தகராறில் பயங்கரம் நாட்டு துப்பாக்கியால் சுட்டு பெண் கொலை; கணவர் கைது
x

சிக்கமகளூரு அருகே குடும்ப தகராறில் மனைவியை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு;

குடும்பத்தகராறு

சிக்கமகளூரு மாவட்டம் முல்லையன்கிரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காபி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் இம்ரான்(வயது 38). இவரது மனைவி மைமூனா(35). இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான். இம்ரான் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் ஆவார். இதனால் அவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மைமூனாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினமும் மது அருந்துவிட்டு இம்ரான் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மகன் செல்போனில் 'கேம்' விளையாடி கொண்டிருந்தான். இதைபார்த்த இம்ரான், மனைவியிடம் செல்போனை விளையாட ஏன் கொடுத்தாய் என்று கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு கொலை

இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த இம்ரான் தோட்ட காவலுக்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து குடிபோதையில் மனைவி என்றும் பாராமல் மைமூனாவை நோக்கி சுட்டார். இதில் குண்டு மைமூனாவின் நெஞ்சு பகுதியில் துளைத்தது. இதில் குண்டு காயமடைந்த மைமூனா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மைமூனா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள், சிக்கமகளூரு புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான மைமூனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், குடும்பத்தகராறில் இம்ரான், மனைவி மைமூனாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது.

கைது

இதையடுத்து இம்ரானை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story