செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அழுததால் ஆத்திரம்: மகனை கழுத்தை நெரித்துகொன்ற கொடூர தாய்...!
மகனை கழுத்தை நெரித்துக்கொன்ற தாய் அப்சனாவை போலீசார் கைது செய்தனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் நிசாமுதீன். இவரது மனைவி அப்சனா. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே, நிசாமுதீனுக்கும் அவரது மனைவி அப்சனாவுக்கும் கடந்த சில நாட்களாக கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கணவன் - மனைவி இடையே மீதும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது 2 வயது மகனுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்ற அப்சனா கதவை மூடியுள்ளார். பின்னர், அப்சனா செல்போனில் யாருடனோ பேசியுள்ளார்.
அப்சனா செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அவரின் 2 வயது மகன் தொடர்ந்து அழுதுள்ளான். இதனால், அப்சனாவுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
செல்போனில் பேசவிடாமல் மகன் தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால் ஆத்திமடைந்த அப்சனா மகனின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி 2 வயது மகன் உயிரிழந்தார்.
மேலும், பூட்டியிருந்த அறையை திறந்துள்ளார். அப்போது, அறைக்குள் வந்த அப்சனாவின் கணவன் நிசாமுதீன் தன் மகன் அசைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மகனை கழுத்தை நெரித்து கொன்ற அப்சனாவை கைது செய்தனர். மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.