பியூட்டி பார்லரில் மேக்அப் போட்டபோது வீங்கிய மணப்பெண் முகம் - திருமணத்தை நிறுத்திய மணமகன்


பியூட்டி பார்லரில் மேக்அப் போட்டபோது வீங்கிய மணப்பெண் முகம் - திருமணத்தை நிறுத்திய மணமகன்
x

திருமணத்திற்கு வித்தியாசமாக மேக்-அப் போட வேண்டும் என்று எண்ணிய மணமகள் புதிய யுக்தியை பயன்படுத்தியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் அரசிகிரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்றது.

திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் கடந்த வாரம் அந்த பெண் பியூட்டி பார்லர் சென்று மேக்அப் போட்டுள்ளார்.

அப்போது, திருமணத்திற்கு வித்தியாசமாக மேக்-அப் போட வேண்டும் என்று எண்ணிய மணமகள் புதிய யுக்தியை பயன்படுத்துமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் கங்கா, தான் புதிய வகையிலான மேக் அப் முறையை கற்றுக்கொண்டுள்ளதாகவும், அதை முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மணப்பெண் முகத்தில் புதிய வகை மேக் அப் போட அனுமதித்துள்ளார்.

அதன்படி, மணப்பெண் முகத்தில் புதிய வகை கிரீமை வைத்து பின்னர் முகத்தை மூடி சுடு தண்ணீராலான நீராவியில் 'ஸ்டீம்' செய்துள்ளனர்.

ஸ்டீம் செய்த பின்னர் மணப்பெண்ணின் முகத்தில் தீக்காயங்களுக்கான தழும்புகள் ஏற்பட்டு, முகம் வீங்கி கறுப்பு நிறமாக மாறியுள்ளது. இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், பியூட்டி பார்லரில் மேக் அப் போட்டபோது முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டு மணப்பெண்ணின் முகம் மாறியதால் மணப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள மணமகன் மறுத்துவிட்டார். இதனால், இருவரின் திருமணம் நின்றுவிட்டது.

அதேவேளை, தவறாக மேக் அப் போட்டு மணப்பெண்ணின் முகம் பாதிப்பிற்கு காரணமான பியூட்டி பார்லர் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story