மைசூரு பட்டுப்புடவைக்காக 'குடுமிபிடி' சண்டையிட்ட பெண்கள்
உலக பிரசித்திபெற்ற மைசூரு பட்டுப்புடவைக்காக 2 பெண்கள் ‘குடுமிபிடி’ சண்டையிட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு:-
மைசூரு பட்டு
தங்களுக்கு வேண்டியது எதுவாக இருந்தாலும், அதனை எந்த எல்லைக்கும் சென்று கைப்பற்றும் திறமை பெண்களுக்கே உரியதாகும். இதற்கு தகுந்த சான்றுகள் ஏராளமாக உள்ளன. பொதுவாக தெரு குழாய்களில், தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்டு வந்த சண்டை தற்போது மைசூரு பட்டுப்புடவைக்கான நடந்துள்ளது.
உலக பிரசித்திபெற்ற மைசூரு பட்டுப்புடவைகள் கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்டது ஆகும். இந்த பட்டுப்புடவைகளுக்கான தேவைப்பாடு எப்போதுமே நிலவி வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விற்பனைக்காக ஏராளமான மைசூரு பட்டுப்புடவைகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சலுகை விலையில் அவை விற்பனைக்கு வந்தன.
தலை முடியை பிடித்து
இதனால் அங்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பட்டுப்புடவைகள் மளமளவென விற்றுதீர்ந்தன. இதையடுத்து குறைந்தளவே புடவைகள் இருந்தன. இந்த நிலையில் ஒரு பட்டுப்புடவைக்காக இரண்டு பெண்கள், 'குடுமிபிடி' சண்டை போட்டனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி, தலை முடியை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.
இதுகுறித்து அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அவர்களை கலைந்து போக செய்தனர். இந்த மோதலுக்கு மத்தியிலும், மற்ற பெண்கள் புடவைகளை தேர்வு செய்வதிலேயே கவனம் செலுத்தினர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.