கல்குவாரி வெடிவிபத்தில் தொழிலாளி சாவு
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா கொம்மனஹள்ளியில் கல்குவாரியில் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மந்திரி முனிரத்னா கூறினார்.
கோலார் தங்கவயல்:
வெடிவிபத்தில் தொழிலாளி சாவு
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா கொம்மனஹள்ளியில் இயங்கி வரும் கல்குவாரியில் கால் தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி ராகேஷ்(வயது 34) என்பவர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் உயிரிழந்தவரின் சகோதரர் ஹரீஷ் சானே வெடிவிபத்தில் காயம் அடைந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் கல்குவாரியில் தனது அண்ணன் கால் தவறி விழுந்து சாகவில்லை, கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் இறந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹரீஷ் சானேவை மந்திரி முனிரத்னா சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உரிய நடவடிக்கை
கல்குவாரியில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. ஆனால் அந்த விபத்தை மூடி மறைக்கும் விதமாக தற்செயலாக ஏற்பட்ட விபத்து என்று கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வசந்தகுமார் போலீஸ் இன்ஸ்பெகடர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் கல்குவாரி அனுமதியுடன் நடத்தப்படுகிறதா, வெடி வைக்க அனுமதி பெற்றுள்ளார்களா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளேன். கல்குவாரி வெடி விபத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.