கெட்ட சகுனம் பிடித்த பிரதமரால் உலக கோப்பை தோல்வி - ராகுல் காந்தி; பா.ஜ.க. கடும் எதிர்ப்பு
நம்பிக்கையின்மை மற்றும் மனவுறுதியற்ற நிலை ஆகியவற்றின் அடையாளங்களாக அவருடைய பேச்சு அமைந்துள்ளது என பா.ஜ.க. மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடி பிரச்சனைகளை திசை திருப்ப முயல்கிறார்.
அவர் தொலைக்காட்சியில் தோன்றி, இந்து-முஸ்லிம் என கூறுகிறார். சில சமயங்களில் கிரிக்கெட் போட்டியை காண போகிறார். உலக கோப்பையை நமது வீரர்கள் வென்றிருக்க கூடும்.
ஆனால், கெட்ட சகுனத்தினால், போட்டியில் தோல்வி அடைந்தோம் என பேசினார். பி.எம். என்றால் பனாடி மோடி (பனாடி என்றால் தீய சகுனம் என்று அர்த்தம்) என கூறினார்.
அவருடைய இந்த பேச்சுக்கு, பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, நம்பிக்கையின்மை மற்றும் மனவுறுதியற்ற நிலை ஆகியவற்றின் அடையாளங்களாக அவருடைய பேச்சு அமைந்துள்ளது. 55 வயது கொண்ட ராகுல் காந்தி அவருடைய வாழ்க்கையில் ஒரு நாள் கூட உழைத்தது இல்லை.
அந்த குடும்பம் ஒட்டுண்ணிகளாக இருந்து நாட்டை சுரண்டும் செயலில் ஈடுபட்டது. அவர்களின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அழிந்து போனது என சாடியுள்ளார்.