திறமையானவர்களின் அதிகார மையமாக இந்தியாவை உலகம் பார்க்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்


திறமையானவர்களின் அதிகார மையமாக இந்தியாவை உலகம் பார்க்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 10 Jan 2024 2:48 PM IST (Updated: 10 Jan 2024 2:58 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காந்திநகர்,

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் இன்று 'துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு' என்ற மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி அதை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது, "உலகின் மூன்று பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் இருக்கும் என்று அனைத்து பெரிய தரமதிப்பீட்டு நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் வேகமாக மாறிவரும் உலக அரங்கில், இந்தியா 'விஷ்வ மித்ரா'வாக (உலகின் நண்பன்) முன்னோக்கி செல்கிறது. பொதுவான இலக்குகளை முடிவு செய்து அவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இந்தியா உலகிற்கு அளித்துள்ளது.

இன்று, உலகம் இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாக, நம்பக்கூடிய நண்பனாக, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்காளியாக, உலக நன்மையை நம்பும் குரலாக, உலக தெற்கின் குரலாக, வளர்ச்சியின் இயந்திரமாகப் பார்க்கிறது. உலகப் பொருளாதாரத்தில், தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையமாகவும், திறமையான இளைஞர்களின் அதிகார மையமாகவும் இந்தியாஉள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன, அடுத்த 25 ஆண்டுகளில் 100 ஆண்டுகள் கொண்டாடுவோம். இந்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு 'அமிர்த காலம்'. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்" . இவ்வாறு அவர் கூறினார்.


Next Story