நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்


நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
x

பன்முகத்தன்மையை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது என்று மோகன் பகவத் கூறினார்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற 'பாரத்@2047: எனது பார்வை எனது செயல்' என்ற நிகழ்ச்சியில் ராஷ்திரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசினார்.

அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், பன்முகத்தன்மையை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- "பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பதில் இந்தியாவை உலகம் சுட்டிக்காட்டுகிறது. உலகம் முரண்பாடுகள் நிறைந்தது, ஆனால் "பன்முகத்தன்மையை நிர்வகிப்பது இந்தியாவில் இருந்து மட்டுமே வரும்.

நமக்குச் சொல்லப்படாத அல்லது சரியான முறையில் கற்பிக்கப்படாத பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. உதாரணமாக, சமஸ்கிருத இலக்கணம் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை. ஏன் என்று நாம் எப்போதாவது கேள்வி கேட்டிருக்கிறோமா?

ஏனென்றால் நாம் முதலில் நமது சொந்த ஞானத்தையும் அறிவையும் மறந்துவிட்டோம். பின்னர் நம் தாய் பூமி வடமேற்கு பகுதியில் இருந்து வந்த வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டது.

நாம் தேவையில்லாமல் சாதி மற்றும் பிற ஒத்த கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். வேலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் மக்களுக்கும் சமூகங்களுக்கும் இடையில் வேறுபாடுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன.

மொழி, உடை, கலாச்சாரம் போன்றவற்றில் நமக்குள் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல், பெரிய படத்தைப் பார்க்கும் மனம் நமக்கு இருக்க வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள், பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் அனைவரும் என்னுடையவர்கள் என்னும் அத்தகைய பாசம் நமக்கு வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story