கர்நாடகத்தில் 4-வது நாள் பாதயாத்திரை: மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ராகுல்காந்தி வழிபாடு


கர்நாடகத்தில் 4-வது நாள் பாதயாத்திரை: மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ராகுல்காந்தி வழிபாடு
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 4-வது நாள் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மேலும் கிறிஸ்தவ ஆலயத்துக்கும், மசூதிக்கும் சென்று அவர் பிரார்த்தனை செய்தார்.

மைசூரு:

ராகுல்காந்தி பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் இருந்து இந்த பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடந்தது. இதையடுத்து கடந்த 30-ந்தேதி சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை வழியாக காங்கிரஸ் பாதயாத்திரை கர்நாடகத்துக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதயாத்திரை மைசூருவுக்கு வந்தது. கர்நாடகத்தில் 4-வது நாளான நேற்று மைசூரு நகரில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். முன்னதாக அவர் சாமுண்டி மலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தார். முன்னதாக சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்துக்கு சென்று மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமியிடம் ஆசி பெற்றார். இதையடுத்து மைசூருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கும், மசூதிக்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.

உற்சாக வரவேற்பு

இதையடுத்து ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடர்ந்தார். அவருடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் திரண்டிருந்த மக்களை பார்த்து ராகுல்காந்தி கையசைத்தார்.

இந்த பாதயாத்திரை மண்டியா மாவட்டத்துக்குள் நுழைந்து ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக பாண்டவபுராவுக்கு சென்றது. பாண்டவபுராவில் கரும்பு விவசாயிகளிடம் குறைகளை கேட்ட ராகுல்காந்தி, அவர்களிடம் இருந்து கரும்பு ஒன்றை வாங்கி ருசித்து பார்த்தார்.

கொட்டும் மழையிலும்...

பாதயாத்திரை பாண்டவபுரா பகுதியில் வந்தபோது, பலத்த மழை கொட்டியது. கொட்டும் மழைக்கும் நடுவேயும் ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடர்ந்தார். நேற்று இரவு மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் ராகுல்காந்தி பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

சோனியா காந்தி வருகை

கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று கர்நாடகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு சோனியா காந்தி வந்தார். அவரை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். பின்னர் சோனியா காந்தி, ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சோனியாவின் உடல் நிலை காரணமாக காரிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மைசூருவிலேயே சோனியாவை தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள ரெசார்ட்டில் அவர் தங்கி உள்ளார். இன்றும், நாளையும் பாதயாத்திரைக்கு ஓய்வு என்பதால், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கும் பாதயாத்திரையில் சோனியா காந்தி கலந்துகொள்கிறார்.

பாதயாத்திரைக்கு இன்றும், நாளையும் ஓய்வு

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி தமிழ்நாட்டில் தொடங்கியது. அன்று முதல் 26 நாட்கள் தொடர்ந்து பாதயாத்திரை நடந்து வந்தது. இந்த நிலையில், காங்கிரசின் பாதயாத்திரைக்கு இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் ராகுல்காந்தி, சோனியா காந்தி தங்கி இருக்கும் சொகுசு விடுதிக்கு செல்ல உள்ளார். இதையடுத்து வருகிற 6-ந்தேதி வழக்கம் போல் பாதயாத்திரை தொடங்குகிறது. அதில் ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் பங்கேற்கிறார்கள்.


Next Story