இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகார் - 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு
பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது பாலியல் புகார் எழுந்தது.
டெல்லி,
நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 18-ம் தேதி திடீரென டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அன்ஷூமாலிக், சத்யவார்த் மாலிக், ஜிதேந்தர் கின்ஹா, அமித் தன்கர், சுமித் மாலிக் ஆகியோரும் அடங்குவர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக 2011-ம் ஆண்டில் இருந்து பிரிஜ் பூஷன் ஷரண் சிங் (வயது 66) இருந்து வருகிறார். பாஜக எம்.பி.யான ஷரண் சிங் நீண்ட காலம் மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்து வரும் நிலையில் அவர் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாகவும், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து தவறாக நடந்து கொள்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வீரர்/வீராங்கனைகள் கடந்த புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
மேரி கோம், டோலா பானர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஷ்வர் தத், சஹ்தேவ் உள்பட 7 பேர் கொண்ட விசாரணைக்குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
இந்த குழு சம்பந்தப்பட்ட தரப்பினரை விரைவில் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் ஷரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.