நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு: விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு


நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு: விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

புதுடெல்லி,

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதை கட்டாயமாக்கி, கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக, கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு 'ரிட்' மனு தாக்கல் செய்தது.

சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறியிருந்தது. இந்த ரிட் மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டடு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுதான்ஷு துலியா கடந்த மாதம் 27-ந்்தேதி விசாரித்தார். ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை விசாரணைக்கு உகந்தது என ஏற்று உத்தரவிட்டார்.

இதன் வாயிலாக, நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் அது தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதிப்பதாகக் கூறி தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


Next Story