மணிப்பூர் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடவேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தங்கள் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) தலைமையில் சுதந்திரமான சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.
வழக்குகளை மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடத்த வேண்டும், மாநில போலீசார் மீது நம்பிக்கையில்லாததால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் வன்முறை
மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மணிப்பூர் வன்முறையின் இரு சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.