யமுனை வெள்ளம் திட்டமிட்ட சதி; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: பா.ஜ.க. பதிலடி
டெல்லியில் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் திட்டமிட்ட சதி என ஆம் ஆத்மி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையை அடுத்து, யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக அபாய அளவை கடந்து நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நொய்டா ஆற்றங்கரை பகுதிகளில் 550 ஹெக்டேர் வரையிலான நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர். 8 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கால்நடைகள், நாய்கள், முயல்கள், வாத்துகள், சேவல்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மீட்கப்பட்டு உள்ளன.
45 ஆண்டுகளில் இல்லாத வகையில், யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், அபாய அளவை விட 2 மீட்டர் உயரம் என்ற அளவில் 207.68 மீட்டராக உயர்ந்து உள்ளது.
இதனை தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், யமுனை ஆற்றின் தடுப்பணையில் இருந்து 5 கதவுகள் திறக்கும் பணிகள் நடந்து வருகின்றன என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து டெல்லி நோக்கி கூடுதலான நீரை வெளியேற்ற ஒரு சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்று ஆம் ஆத்மி சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இதனால், டெல்லியில் வெள்ள சூழ்நிலை காணப்படுகிறது என குற்றச்சாட்டு கூறியுள்ளது.
டெல்லி நீர்ப்பாசன மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு துறை மந்திரி சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, டெல்லியை நீரில் மூழ்கடிக்க சதி. சுப்ரீம் கோர்ட்டு உள்பட டெல்லியின் அனைத்து முக்கிய அமைப்புகளையும் வெள்ள நீரில் மூழ்க செய்ய சதி திட்டம் உள்ளது.
இதேபோன்று டெல்லி பொது பணி துறை மந்திரி அதிஷி கூறும்போது, யமுனை ஆற்றில் நீர் வடிந்து கொண்டிருக்கிறது. அடுத்து 12 மணிநேரத்தில் டெல்லி மக்கள் நிவாரணம் பெறுவார்கள். அனைத்து நீரும் டெல்லிக்கு மட்டுமே ஏன் திருப்பி விடப்படுகிறது? என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம் மற்றும் அரியானாவுக்கு செல்ல கூடிய கால்வாய்களுக்கு ஒரு துளி கூட ஏன் நீர் திறந்து விடப்படவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
எனினும், இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்து உள்ளது. டெல்லி அரசு பொறுப்புணர்வில் இருந்து தப்பிக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிற மாநிலங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறியது போன்று கூறியுள்ளது என தெரிவித்து உள்ளது.