அலிகார் பல்கலைக்கழகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாமியார் நரசிங்க ஆனந்த்
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் குறித்து சாமியார் நரசிங்க ஆனந்த் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த ஆண்டு நடந்த இந்து மதம் சார்ந்த கூட்டத்தில் பங்கேற்ற சாமியார் நரசிங்க ஆனந்த் இஸ்லாமிய மத்தினர் குறித்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாமியார் நரசிங்க ஆனந்த் பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், சாமியார் நரசிங்க ஆனந்த் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நேற்று இந்து மத அமைப்பான இந்து மகாசபா அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாமியார் நரசிங்க ஆனந்த் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அரசால் அங்கிகரிக்கப்படாத இஸ்லாமிய மதப்பள்ளிகளான மதராசாக்கள் குறித்து உத்தரபிரதேச அரசு ஆய்வு நடத்தி வருவது தொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய சார்மியார் நரசிங்க ஆனந்த், சீனா செய்ததது போன்று அனைத்து மதராசாக்களும் (இஸ்லாமிய மதப்பள்ளி) வெடிமருந்து கொண்டு தகர்க்கப்படவேண்டும். அனைத்து மதராசா மாணவர்களும் முகாம்களுக்கு அனுப்பப்படவேண்டும். அப்போது தான் குரான் (இஸ்லாமிய மத புத்தகம்) எனப்படும் வைரஸ் அவர்களின் மூளையில் இருந்து நீக்கப்படும்.
மதராசாக்கள் போன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் தகர்க்கப்படவேண்டும். அங்கு பயிலும் மாணவர்கள் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் மூளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவேண்டும்' என கூறினார்.
சாமியார் நரசிங்க ஆனந்த் பேசும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாமியார் நரசிங்க ஆனந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பூஜா ஷகுன், அசோக் பாண்டே என 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க... பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய வழக்கு: சாமியார் நரசிங்க ஆனந்த் ஜாமீனில் விடுதலை