தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவில் இருந்து எடியூரப்பா ஓரம் கட்டப்படுவார்


தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவில் இருந்து எடியூரப்பா ஓரம் கட்டப்படுவார்
x
தினத்தந்தி 2 March 2023 12:15 AM IST (Updated: 2 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவில் இருந்து எடியூரப்பா ஓரம் கட்டப்படுவார் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

பஞ்சரத்னா யாத்திரை

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் சார்பில் யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜனதா தளம் (எஸ்) கட்சி பஞ்சரத்தினா என்ற பெயரில் யாத்திரையை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் யாத்திரை தொடங்கியது. இதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமை தாங்கினார். திறந்த வேனில் சென்ற அவருக்கு பெண்கள் தரப்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து குமாரசாமி பணவரவிலு, சக்கராயப்பட்ணா, நிடுகட்டா ஆகிய கிராமங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது சிக்கமகளூரு அனுமந்தப்பா சர்க்கிள் பகுதிக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வந்தார். பெண்கள் தரப்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பெண்கள் பூரண கும்பத்துடன் செல்ல குமாரசாமி, திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தபடி சென்றார். இறுதியாக இந்த பஞ்சரத்தினா யாத்திரை ஆசாத் பூங்காவில் முடிந்தது. அப்போது சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.திம்மா செட்டியை ஆதரித்து, குமாரசாமி பேசினார்.

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த குமாரசாமி கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றால். ஒரு ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை உதவி தொகை வழங்கப்படும். மேலும் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். ஆனால் ஆட்சி பொறுப்பில் இருக்கும் மத்திய, மாநில அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. மாறாக கட்சியில் முதல்-மந்திரி பதவி யாருக்கு வழங்குவது என்ற போட்டி நிலவி வருகிறது.

பிரதமர் புகழ்ச்சி

சமீபத்தில் கர்நாடகம் வந்த பிரதமர் மோடி எடியூரப்பாவை புகழ்ந்து பேசினார். தற்போது புகழ்ந்து பேசுபவர் எதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கவேண்டும். வயது காரணமா?. பா.ஜனதா கட்சியில் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். அத்வானிக்கு அடுத்து எடியூரப்பாவை ஓரம் கட்டுகின்றனர். தற்போது தேர்தல் நடந்து வருவதால்,உடன் சேர்த்து வைத்துள்ளனர். இல்லையென்றால் அந்த ஜாதி ஓட்டு கிடைப்பது இல்லை.

தேர்தல் நடந்து முடிந்த பின்னர் எந்த மாற்றம்வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

அதேபோல கர்நாடகத்திற்கு வரும் பிரதமர் மோடி வீரேந்திர பட்டீல், நிஜலிங்கப்பாவை பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை பற்றி பேசுவது இல்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சி தேர்தலில் வளர்ச்சி திட்டங்களை முன் வைத்து பிரசாரம் செய்து வருகிறது.

ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமையும்

இந்த முறை ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைப்பது உறுதி. ஜனதா தளம் (எஸ்) கட்சியில் கோஷ்டிபூசல் இருப்பதாக கூறுகின்றனர். அதில் உண்மை இல்லை. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெயிடப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

தேவேகவுடாவின் உடல் நிலை பற்றி விசாரிக்கின்றனர். அவர் நலமுடன் உள்ளார். யாரும் அவரை தொந்தரவு செய்யவேண்டும். தொண்டர்கள் தன்னை ஆஸ்பத்திரியில் வந்து, நலன் விசாரிப்பதை அவர் விரும்பவில்லை. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story