பெங்களூருவில் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி கைக்கெடிகாரங்கள் விற்ற வாலிபர் கைது
பெங்களூருவில் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி கைக்கெடிகாரங்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள எச்.கே.பி. ரோட்டில் இருக்கும் ஆஸ்பத்திரி அருகே போலி கைக்கெடிகாரங்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கைக்கெடிகாரங்கள் விற்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த கைக்கெடிகாரங்களை சோதனை செய்த போது, அது பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, சையத் முகமது என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இவர் மும்பையை சேர்ந்த பீமாராம், ஜெகதீஷ், சுகேல் ஆகியோரிடம் இருந்து பிரபல நிறுவனங்களின் பெயரிலான போலி கைக்கெடிகாரங்களை வாங்கி இருக்கிறார்.
அதனை பெங்களூருவுக்கு கடத்தி வந்து சிவாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சையத் முகமதுவிடம் இருந்து பிரபல நிறுவனங்களின் பெயரிலான 83 கைக்கெடிகாரங்கள் பறிமுதல் செய்யபபட்டது. அவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 32 லட்சத்து 75 ஆயிரம் ஆகும். கைதான சையத் முகமது மீது சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.