மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வாலிபர் கைது


மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை காதலித்து முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதாக மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

இளம்பெண்ணை காணவில்லை

பெங்களூரு யஷ்வந்தபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தொழிலாளி வசித்து வருகிறார். அவருக்கு 19 வயது ஒரு மகள் உள்ளார். அந்த தொழிலாளியின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகும். கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளி தனது மகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 5-ந் தேதி தொழிலாளியின் மகள் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.

இதையடுத்து, தனது மகளை காணவில்லை என்று கூறி யஷ்வந்தபுரம் போலீஸ் நிலையத்தில் தொழிலாளி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடிவந்தனர். இந்த நிலையில், கடந்த 12-ந் தேதி யஷ்வந்தபுரத்தை சேர்ந்த சையத் மோகின் (24) என்பவருடன், புர்கா அணிந்து கொண்டு அந்த இளம்பெண் யஷ்வந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இதுபற்றி தொழிலாளிக்கு தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

முஸ்லிம் மதத்திற்கு மாற்றம்

உடனே அவர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது சையத் மோகினை, இளம்பெண் காதலித்து இருப்பதும், அவரை திருமணம் செய்ய இந்துமதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி இருப்பதும் தெரியவந்தது. அதாவது இளம்பெண்ணை ஆந்திராவுக்கு அழைத்து சென்ற சையத் மோகின், அங்குள்ள மசூதியில் வைத்து முஸ்லிம் மதத்திற்கு மாற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தனது மகளை காதலித்து, இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு சையத் மோகின் சட்டவிரோதமாக மதம் மாற்றி இருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி யஷ்வந்தபுரம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டார்.

மதமாற்ற தடை சட்டத்தின் கீழ்...

கர்நாடகத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) மதமாற்ற தடை சட்டத்தை அரசு கொண்டு வந்திருந்தது. இதையடுத்து, தொழிலாளி கொடுத்த புகாரின் பேரில் யஷ்வந்தபுரம் போலீசார், மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் சையத் மோகின் மீது வழக்குப்பதிவு செய்தார்கள். மேலும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதற்கு மாவட்ட கலெக்டரிடம் முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.

ஆனால் இளம்பெண் மதமாறியதில் எந்த விதிமுறைகளையும் சையத் மோகின் பின்பற்றவில்லை. இதன் காரணமாக அவர் மீது மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த பின்பு முதல் முறையாக பெங்களூருவில், அந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story