போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை; பொய் வழக்கு தொடுத்ததால் சோக முடிவு
போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மீது பொய் வழக்கு தொடுத்ததால் தற்கொலை செய்தது தெரியவந்தது.
பாலக்காடு,
போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மீது பொய் வழக்கு தொடுத்ததால் தற்கொலை செய்தது தெரியவந்தது.
திருவனந்தபுரம் அருகே வெங்காத்தனூர் பகுதியில் வசிப்பவர் அமல் ஜித்(வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். அமல் ஜித்தின் மனைவி, தொடுபுழா பகுதியை சேர்ந்த ஒருவரை ஏற்கனவே திருமணம் செய்து 2-வதாக அமல் ஜித்தை திருமணம் செய்து கொண்டார்.
இதன் காரணமாக அமல் ஜித்துக்கும், அவரது மனைவியின் முதல் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதுதொடர்பாக முதல் கணவர், அமல் ஜித் மீது தொடுபுழா நகரில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் தொடுபுழா போலீசார் அமல் ஜித் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வரும்படி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அமல் ஜித் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அமல் ஜித் திருவனந்தபுரம் போலீசாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போனை ஆப் செய்துவிட்டார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, அமல் ஜித் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து போலீசார் அமல் ஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். முதல் கட்ட விசாரணையில் தொடுபுழா போலீசார் அமல் ஜித் மீது பொய் வழக்கு தொடர்ந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.