தலைவர்களுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
சித்தராமையாவின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று கன்டீரவா ஸ்டேடியம் முழுவதும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:-
சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார்
கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அத்துடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். மந்திரிகளின் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்காக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேற்று காலை 9 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மந்திரிசபையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. இதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு தலா 10 இடங்களும், காங்கிரஸ் மேலிடத்திற்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மந்திரி பதவியை பெறும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை டெல்லி சென்றனர்.
மந்திரி பதவிக்கு பரிந்துரை
அதாவது எம்.எல்.ஏ.க்கள் வீரேந்திரா, கோவிந்தப்பா, டி.சுதாகர், ரகுமூர்த்தி, அஜய்சிங், யஷ்வந்த்ராஜ் கவுடா பட்டீல், எம்.சி.சுதாகர், பிரதீப் ஈஸ்வர், கிருஷ்ண பைரேகவுடா, என்.ஏ.ஹாரீஷ், சீனிவாஸ் மானே, ரிஸ்வான் ஹர்ஷத், ஈஸ்வர் கன்ட்ரே, ரகிம்கான், சிவராஜ் தங்கடகி, சி.எஸ்.நாடகவுடா, அசோக் ராய், கே.என்.ராஜண்ணா, கே.ஆர்.ராஜேந்திரா, விஜயானந்த் காசப்பன்னவர் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டு கொண்டனர். அவர்கள் கட்சியின் இதர மேலிட தலைவர்கள் சிலரையும் சந்தித்து மந்திரி பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், தினேஷ் குண்டுராவ், பி.கே.ஹரிபிரசாத், யு.டி.காதர், ஜமீர் அகமதுகான், வினய் குல்கர்னி, தன்வீர்சேட் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'இசட் பிளஸ்' பாதுகாப்பு
சித்தராமையா பதவி ஏற்கும் விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த விழாவில் அகில இந்திய அளவில் முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 6 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வருகை தரும் இந்த தலைவர்களுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விழா நடைபெறும் கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த ஸ்டேடியமே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தின் உள்ளே வெடிகுண்டு பிரிவு போலீசார் அங்குலம், அங்குலாக சோதனை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடை
விழா ஏற்பாடுகளை தலைமை செயலாளர் வந்திதா சர்மா கவனித்து வருகிறார். இந்த பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா நடைபெறும் ஸ்டேடியத்திற்குள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள், தீ பற்றும் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், கூர்மையான ஒளியை ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.