குண்டலுபேட்டை அருகே புலி தாக்கி 2 விவசாயிகள் படுகாயம்


குண்டலுபேட்டை அருகே புலி தாக்கி 2 விவசாயிகள் படுகாயம்
x

குண்டலுபேட்டை அருகே புலி தாக்கியதில் 2 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.

கொள்ளேகால்:

2 விவசாயிகள் படுகாயம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கடச்சினா, கோபால்பூர் கிராமங்கள் பந்திப்பூர் வனப்பகுதிையயொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கடச்சினா கிராமத்தை சேர்ந்த கவியப்பா, பந்திப்பூர் வனப்பகுதியையொட்டி உள்ள தனது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து ெவளியேறிய புலி ஒன்று, கவியப்பாவுக்கு சொந்தமான பசுமாட்டை வேட்டையாடி கொன்றது.

இதனை பார்த்த கவியப்பா, புலியை விரட்டியடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த புலி, கவியப்பா மீதும் பாய்ந்து தாக்கியது. இதனால் அவர் கூச்சலிட்டார். அவருடைய கூச்சல் சத்தத்தை கேட்டு பக்கத்து தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த கோபால்புராவை சேர்ந்த ராஜசேகர் என்பவர் விரைந்து வந்து புலியை விரட்டினார். அப்போது அவரையும் புலி தாக்கியது. இதையடுத்து புலி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. புலி தாக்கியதில் 2 விவசாயிகளும் பலத்த காயம் அடைந்தனர்.

மக்கள் பீதி

இதுபற்றி அறிந்ததும் சக விவசாயிகள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புலி தாக்கி 2 விவசாயிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்தப்பகுதியில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வனத்துறையினரும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அந்தப்பகுதியில் கூண்டு வைப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story