மாவட்ட செய்திகள்

அர்ஜூனா உள்பட 8 யானைகள் மைசூருவுக்கு கஜப்பயணம் + "||" + 8 elephants including Arjuna Going to Mysore

அர்ஜூனா உள்பட 8 யானைகள் மைசூருவுக்கு கஜப்பயணம்

அர்ஜூனா உள்பட 8 யானைகள் மைசூருவுக்கு கஜப்பயணம்
தசரா விழாவில் கலந்துகொள்ள தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 8 யானைகளும் கஜப்பயணமாக மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன.

மைசூரு,

தசரா விழாவில் கலந்துகொள்ள தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 8 யானைகளும் கஜப்பயணமாக மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன. முன்னதாக இந்த கஜப்பயணத்தை மந்திரி மகாதேவப்பா தொடங்கிவைத்தார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் ஆயுதபூஜையை முன்னிட்டு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற இந்த தசரா விழா இந்த ஆண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 21–ந்தேதி தொடங்கி 30–ந்தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவையொட்டி 30–ந்தேதி ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கிறது. இதில் அர்ஜூனா யானை 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து செல்லும். மற்ற யானைகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து செல்லும். அதைதொடர்ந்து அலங்கார வாகனங்கள், குதிரைப்படை, கலைக்குழுவினர் செல்வார்கள். இந்த ஊர்வலம் தான் தசரா விழாவின் சிகரநிகழ்ச்சியாகும்.

இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள நாகரஒலே, கே.குடி, திதிமதி, மத்திக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள யானைகள் முகாம்களில் இருந்து தசரா யானைகள் ஒரு மாதத்துக்கு முன்பே மைசூருவுக்கு அழைத்து வரப்படும். இந்த நிகழ்வு கஜப்பயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா விழாவில் கலந்துகொள்ள முதற்கட்டமாக 8 யானைகள் கஜப்பயணம் 12–ந்தேதி (அதாவது நேற்று) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா நாகரஒலே வனப்பகுதிக்கு உட்பட்ட நாகாபுர ஆடி கிராமத்தில் நடந்தது. அங்கு கஜப்பயணம் மேற்கொள்ளும் யானைகள் அலங்கரித்து அழைத்துவரப்பட்டு இருந்தது. இதில் தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா, பலராமா, அபிமன்யூ, விஜயா, காவேரி, வரலட்சுமி ஆகிய 6 யானைகள் மட்டுமே கலந்துகொண்டன.

இந்த யானைகளுக்கு காலை 11 மணி அளவில் மாநில பொதுப்பணித் துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எச்.சி.மகாதேவப்பா தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவைகளுக்கு கரும்பு, வெல்லம், கொப்பரை தேங்காய், வாழைப்பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

அதைதொடர்ந்து கஜப்பயணத்தை மந்திரி மகாதேவப்பா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் யானைகள் மீது மலர்களை தூவினர். இந்த நிகழ்ச்சியில் மஞ்சுநாத் எம்.எல்.ஏ., மைசூரு மேயர் ரவிக்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவி நகிமா சுல்தான், மாவட்ட கலெக்டர் ரன்தீப், வாரியத் தலைவர்கள் துருவகுமார், மல்லிகே வீரேஷ், சித்தராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையொட்டி நாகாபுரஆடி கிராமத்தில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அத்துடன் திபெத் அகதிகள் முகாமை சேர்ந்த மக்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. கஜப்பயணம் மேற்கொண்ட யானைகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றன. பின்னர் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு 6 யானைகளும் மைசூரு வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அதேப் போல் குடகு மாவட்டம் மத்திக்கோடு முகாமில் இருந்து பீமா, கே.குடி முகாமில் இருந்து கஜேந்திரா ஆகிய 2 யானைகளும் மைசூருவுக்கு கஜப்பயணம் மேற்கொண்டன. அந்தந்த முகாமில் இருந்து லாரியில் இந்த யானைகள் மைசூரு வனச்சரக அலுவலகத்துக்கு வந்தடைந்தன.

நேற்று ஒரே நாளில் தசரா விழாவில் கலந்துகொள்ள 8 யானைகள் கஜப்பயணமாக மைசூருவுக்கு வந்துள்ளன. இந்த யானைகள் வருகிற 17–ந்தேதி (வியாழக்கிழமை) மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரும் பாரம்பரிய நிகழ்வு நடக்கிறது. அப்போது அந்த யானைகளுக்கு அரண்மனை அர்ச்சகர் சிறப்பு பூஜை நடத்தி அரண்மனைக்கு அழைத்து வருவார். இதில் மந்திரிகள், எம்.பி.– எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள உள்ளனர்.