மாவட்ட செய்திகள்

சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி வேட்பாளர் பதவிக்கு போட்டியா? + "||" + Assembly elections Chief Minister candidate for the post contest?

சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி வேட்பாளர் பதவிக்கு போட்டியா?

சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி வேட்பாளர் பதவிக்கு போட்டியா?
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி வேட்பாளர் பதவிக்கு போட்டியா? என்பதற்கு மந்திரி டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மின்சாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபைக்கு நடந்த தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தனர். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பு மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு கட்சி மேலிடம் அளித்திருந்தது. அதன்படி, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து சொகுசு விடுதியில் டி.கே.சிவக்குமார் தங்க வைத்தார். இதனால் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே டெல்லி மேல்–சபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அகமது பட்டேல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் காங்கிரஸ் மேலிடத்தில் டி.கே.சிவக்குமாரின் செல்வாக்கு உயர்ந்தது. மேலும் அவருக்கு துணை முதல்–மந்திரி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி வேட்பாளர் பதவிக்கு டி.கே.சிவக்குமார் போட்டியிடுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ராய்ச்சூரில் நேற்று மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

கர்நாடத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் தான் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. குஜராத் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பை கட்சி மேலிடம் எனக்கு அளித்தது. அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். கட்சி மேலிடம் கொடுத்த பணியை சிறப்பாக செய்து கொடுத்துள்ளேன்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக கட்சியின் பிரசார குழு தலைவராக என்னை மேலிடம் நியமித்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து அந்த பொறுப்பு மேலிடத்தால் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நீங்கள் (நிருபர்கள்) கேட்பது போல முதல்–மந்திரி வேட்பாளர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. பதவியை எதிர்பார்த்து நான் எந்த ஒரு வேலையையும் செய்ததில்லை. பதவி ஆசை எனக்கு இல்லை.

மாநிலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. மின்தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்திற்கு மின் தேவையின் அளவு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க சாத்தியமில்லை. ராய்ச்சூருக்கு நிரந்தர மின்வசதி செய்து கொடுக்க இயலாத நிலை உள்ளது.

நடிகர் உபேந்திரா அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். புதிய கட்சி தொடங்கி மக்களுக்கு நன்மை செய்தால், செய்யட்டும். அதனை யாரும் தடுக்க போவதில்லை. நடிகர் உபேந்திரா சினிமாவில் வர்ணம் பூசிக் கொண்டு நடிக்கிறார். அரசியலிலும் அவர் வர்ணம் பூசிக் கொண்டு நடித்து விடக்கூடாது. வருமான வரி சோதனை முடிந்து போன வி‌ஷயம். அதுபற்றி மீண்டும் பேச விரும்பவில்லை.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.