மாவட்ட செய்திகள்

தமிழக போலீசார் மிரட்டி பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புகார் + "||" + TTV Dinakaran's supporting MLAs complained

தமிழக போலீசார் மிரட்டி பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புகார்

தமிழக போலீசார் மிரட்டி பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புகார்
எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படக்கூறி தமிழக போலீசார் தங்களை மிரட்டி பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக போலீசாரிடம் புகார் செய்தனர்.
குடகு,

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள ‘பெண்டிங் பான்’ எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழ்நாடு கோவை மற்றும் நாமக்கல் போலீசார் அந்த விடுதிக்கு சென்று எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காண்டிராக்டர் ராம.சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பனிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் விடுதிக்கு சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும், போலீசார் விடுதி மேலாளர், ஊழியர்கள் மற்றும் அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. மேலும் விடுதி முழுவதும் போலீசார் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தமிழக போலீசார் மீது வழக்குப்பதிவு

இதற்கிடையே நேற்று மாலையில் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வெளியே வந்தனர். அவர்களுடன் ஒரு வக்கீலும் இருந்தார். அவர்கள் விடுதியில் இருந்து சுண்டிகொப்பா போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்த கர்நாடக போலீசாரிடம், தமிழக போலீசார் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டது குறித்தும், தங்களை மிரட்டி பேரம் பேசியது குறித்தும் கூறி புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட சுண்டிகொப்பா போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையை நாளை(அதாவது இன்று) தொடங்குவதாக அவர்கள் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்

நாங்கள்(எம்.எல்.ஏ.க்கள்) சொகுசு விடுதியில் தங்கி உள்ளது குறித்து அறிந்த தமிழக போலீசார் இங்கு சாதாரண உடையில் வந்தனர். அவர்கள் போலீஸ் வாகனங்களில் வராமல், தனியாருக்கு சொந்தமான வாகனங்களில்தான் வந்தனர். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வந்து விசாரணையை முடித்துவிட்டு சென்ற அவர்கள், இன்று (நேற்று) காலையிலும் வந்து எங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். எங்களை சோதனையிட்டனர். நாங்கள் தங்கியிருந்த அறைகளிலும் அத்துமீறி நுழைந்து தீவிர சோதனை நடத்தினர்.

பின்னர் மீண்டும் எங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்கக்கூறி மிரட்டினர். ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வாங்கித்தருவதாக பேரம் பேசினர். மேலும் ஆதரவு தரவில்லை என்றால் நீங்கள் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறி மிரட்டினர். அவர்களது ஆசை வார்த்தைகளுக்கும், மிரட்டலுக்கும் நாங்கள் பணியவில்லை. அவர்களது மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். தற்போது எங்களை மிரட்டி பேரம் பேசிய தமிழக போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளோம். போலீசார் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியிடம் புகார் அளிப்போம்

ஜெயலலிதாவின் வழியில் நடக்கிறவர்கள் நாங்கள். டி.டி.வி.தினகரன் உத்தரவின்பேரில்தான் நாங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் அவர் துரோகம் செய்துவிட்டார். இனி நாங்கள் டி.டி.வி.தினகரன் சொல்லும்படிதான் நடப்போம். கவர்னரிடம் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறி கடிதம் கொடுத்துள்ளோம்.

அவர் இதுபற்றி விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இல்லையெனில் ஜனாதிபதியிடம் முறையிட்டு புகார் அளிப்போம். ஏற்கனவே நாங்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தோம். அங்கு நிருபர்கள் அதிக அளவில் கூடியதால், அங்கிருந்து யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து இங்கு வந்தோம். ஆனால் இங்கும் போலீசாரும், நிருபர்களும் வந்துவிட்டனர்.

அவசியம் இல்லை

நாங்களாக நிருபர்களுக்கு பேட்டிக் கொடுக்கக்கூடாது என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதனாலேயே நாங்கள் நிருபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. தற்போது விடுதியில் நாங்கள் 19 பேர் தங்கி உள்ளோம். ஆனால் அவர்கள் அனைவரையும் நிருபர்கள் முன்பு காட்டி அணிவகுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.