மாவட்ட செய்திகள்

மத்திய போலீஸ் படை மையம் உத்தர பிரதேசத்திற்கு இடமாற்றம்: மந்திரி ராமலிங்கரெட்டி, குமாரசாமி கடும் எதிர்ப்பு + "||" + Central Police Force Transfer to Uttar Pradesh: Minister Ramalinga Reddy, Coomaraswamy Strong resistance

மத்திய போலீஸ் படை மையம் உத்தர பிரதேசத்திற்கு இடமாற்றம்: மந்திரி ராமலிங்கரெட்டி, குமாரசாமி கடும் எதிர்ப்பு

மத்திய போலீஸ் படை மையம் உத்தர பிரதேசத்திற்கு இடமாற்றம்:
மந்திரி ராமலிங்கரெட்டி, குமாரசாமி கடும் எதிர்ப்பு
மத்திய போலீஸ் படை மையம் உத்தரபிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி, குமாரசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு,

பெங்களூரு தெற்கு பகுதியில் தருலு என்ற இடத்தில் மத்திய போலீஸ் படை மையம் உள்ளது. அந்த மையம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூருவில் பல ஆண்டுகளாக உள்ள மத்திய போலீஸ் படை மையத்தை மத்திய அரசு உத்தரபிரதேசத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது. இதுபற்றி மாநில அரசுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இது சரியல்ல. இதுபற்றி கர்நாடக அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். அதை விடுத்து இரவோடு இரவாக அந்த மையத்தை மாற்றியது தவறு. மத்திய போலீஸ் படையை அமைக்கவும், அதை வேறு இடத்திற்கு மாற்றவும் முடிவு எடுக்க குழுக்கள் இருக்கின்றன. மத்திய அரசு தனது இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்“ என்றார்.

ஆச்சரியம் அளிக்கிறது

அதே போல் ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கர்நாடகத்தில் 2 மத்திய போலீஸ் படை மையங்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றை மத்திய அரசு ரகசியமாக உத்தரபிரதேசத்திற்கு இடம் மாற்றியுள்ளது. இது ஆச்சரியம் அளிக்கிறது. மாநில அரசுக்கு தகவல் கூட தெரிவிக்காமல் இதை மத்திய அரசு செய்துள்ளது. இது மாநிலத்தின் மண்டல பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். நியாயமற்ற இந்த முடிவு கர்நாடக மக்களுக்கு வேதனை அளிக்கிறது. இது தென்மாநிலங்களுக்கு குறிப்பாக கர்நாடகத்திற்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். எனவே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.