மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை பிடிப்பது உறுதி தேவேகவுடா பேச்சு + "||" + Deve Gowda Talk

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை பிடிப்பது உறுதி தேவேகவுடா பேச்சு

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை பிடிப்பது உறுதி
தேவேகவுடா பேச்சு
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை பிடிப்பது உறுதி என்று தேவே கவுடா கூறினார்.
பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் எதிர்நோக்கி காத்திருக்கும் நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில் தேவேகவுடா பேசியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2, 3 மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறும் என்பதால் சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தேர்தல் தந்திரங்களை...

பிரதமர் மோடி நவம்பர் மாதம் 2-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அக்கட்சியின் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மோடி பேசுகிறார். அதே போல் ‘காம் கீ பாத்’ நிகழ்ச்சியை தொடங்கி அதில் பேச சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இந்த கட்சிகளின் தேர்தல் தந்திரங்களை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

அந்த 2 தேசிய கட்சிகளிடமும் பணம் உள்ளது. பண பலத்தின் அடிப்படையில் அந்த கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் நம்மிடம் பணம் இல்லை. கட்சி பலத்தின் அடிப்படையில் நாம் தேர்தலை எதிர்கொள்கிறோம். அதனால் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.

டிக்கெட் கொடுக்குமாறு...

கட்சி அலுவலகத்திற்கு வந்து டிக்கெட் கொடுக்குமாறு கேட்க வேண்டாம். கட்சி கொடியை பிடித்து உழைக்க வேண்டும். கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். யாருடைய தயவும் இல்லாமல் நமது கட்சி சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். ஜனதா தளம்(எஸ்) ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

கிராமங்களுக்கு சென்று மக்களை கவர வேண்டும். நீங்கள் யாரும் எங்களிடம் வர வேண்டாம். மாவட்டம் வாரியாக கட்சி பணியாற்றுபவர்களின் விவரங்களை கேட்டு பெறுவேன். டிக்கெட் கேட்டு அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்க மாட்டோம். யாருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

ஆட்சியை பிடிப்பது உறுதி

குமாரசாமி தனது தந்தையை விட்டு வர வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் கட்சியை விட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் தங்களின் தொகுதிகளில் வெற்றி பெற்று காட்டட்டும் பார்க்கலாம். மாநில மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை பிடிப்பது உறுதி.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.