மாவட்ட செய்திகள்

சித்தராமையாவை கண்டித்து கர்நாடகத்தில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் + "||" + Condemned siddaramaiah Today in Karnataka Prison firing struggle

சித்தராமையாவை கண்டித்து கர்நாடகத்தில் இன்று சிறை நிரப்பும் போராட்டம்

சித்தராமையாவை கண்டித்து கர்நாடகத்தில் இன்று சிறை நிரப்பும் போராட்டம்
பயங்கரவாதிகள் என கூறிய சித்தராமையாவை கண்டித்து கர்நாடகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று ஷோபா எம்.பி. கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

முதல்–மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயங்கரவாதிகள் என்று கூறி இருக்கிறார்கள். இதனை கண்டித்து பா.ஜனதா சார்பில் நாங்கள் நாளை(அதாவது இன்று) சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இன்று பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அமைதி வழியில் இந்த போராட்டம் நடத்தப்படும்.

முதல்–மந்திரியின் கருத்துப்படி நாங்கள் பயங்கரமானவர்கள். இந்த கருத்து தெரிவித்ததற்காக சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் இந்த சிறை நிரப்பும் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும். போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி தனது பணியை சரியாக ஆற்றவில்லை. அவரும் தனது தலைவருடன் சேர்ந்து பா.ஜனதாவுக்கு எதிராக தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

காலிஸ்தான் இயக்க போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவாக இருந்ததால் பஞ்சாப் மக்கள் 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டனர். அவர்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் இயக்கத்திற்கு காங்கிரஸ் ரகசியமாக ஆதரவு வழங்கியது. நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து காங்கிரஸ் செயல்பட்டது.

இந்த கடினமான உண்மைகளை காங்கிரசார் மறுக்க முடியுமா?. மைசூருவில் குண்டு வெடிக்கும் என்று தலைமை செயலாளருக்கு ஒரு புதிய அமைப்பு கடிதம் எழுதியது. அந்த அமைப்பு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் வார்த்தை உண்மையாகும் விதமாக மைசூரு கோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது.

பயங்கரவாதம் மீதான காங்கிரசின் மென்மையான போக்கால் தான் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். வடகிழக்கு மாநிலங்களில் உல்பா பயங்கரவாத அமைப்புடன் அக்கட்சி ரகசிய உறவு வைத்துள்ளது. நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தால் அதற்கு காங்கிரசின் மென்மையான போக்கே காரணம் ஆகும். இவ்வாறு ஷோபா எம்.பி. கூறினார்.