மாவட்ட செய்திகள்

மழையின் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும், வெள்ள சுவடு மாறாத குடகு மாவட்டம் + "||" + The rains are affected One month, Floodwise District

மழையின் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும், வெள்ள சுவடு மாறாத குடகு மாவட்டம்

மழையின் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும், வெள்ள சுவடு மாறாத குடகு மாவட்டம்
மழையின் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் வெள்ள சுவடு மாறாத நிலையில் குடகு மாவட்டம் காட்சி அளிக்கிறது. வீடுகளை இழந்த 1,600-க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் முகாம்களில் தவித்து வருகிறார்கள்.
குடகு,

கர்நாடகம்-கேரளா மாநில எல்லையில் குடகு மாவட்டம் உள்ளது. மலைநாடு என அழைக்கப்படும் குடகில் காபி, குருமிளகு, வாழை, நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மடிகேரி அருகே உள்ள பாகமண்டலாவில் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. அத்துடன் ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. இங்கு எப்போதும் குளு,குளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.


இதனால் கர்நாடகத்தின் ஸ்காட்லாந்து என குடகு மாவட்டம் வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய பெயர் பெற்ற குடகு மாவட்டத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) மாதம் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தன. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதன் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்தனர். பின்னர் அவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மழை வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். இதில் வீடுகளை இழந்த 1,600-க்கும் மேற்பட்டோர் இன்னும் முகாம்களில் தங்கியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளம்-நிலச்சரிவால் உருக்குலைந்த குடகு மாவட்டத்தில் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மடிகேரி-குசால்நகர், மடிகேரி-விராஜ்பேட்டை உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் மண்அரிப்பு, நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுபோல் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. பாலங்களும் சேதமடைந்துள்ளன. இந்த கனமழைக்கு 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

வரலாறு காணாத அளவுக்கு மழையால் சேதமடைந்த குடகில் கடந்த 15 நாட்களாக மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சாலைகள் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் சோமவார்பேட்டை தாலுகாவில் ஓடும் அட்டிஒலே ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் மரம், செடி, கொடிகள், வனவிலங்குகள், பாறாங்கற்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு சுண்டிகொப்பா பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. அந்த பகுதியில் தற்போது கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அங்கு பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மடிகேரி-மங்களூரு நெடுஞ்சாலையில் சில இடங்களில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. மற்ற சாலைகளில் சீரமைப்பு பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் தற்காலிகமாக அலுமினிய கூடாரம் அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் அந்த அலுமினிய கூடாரத்தில் தங்க முடியாது என கூறி மக்கள் அதில் தங்க மறுத்துவிட்டனர். இதனால் முகாம்களில் வீடுகளை இழந்த மக்கள் பரிதவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். அதற்கான இடங்களை கண்டறியும் பணியில் கலெக்டர் ஸ்ரீவித்யா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக கே.நெடுகனே கிராமத்தில் இடம் கண்டறியப்பட்டது. தற்போது 500 பேருக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குடியேற சம்மதிப்பவர்களுக்கு, அங்கு இடம் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மழையின் கோர தாண்டவத்தால் நிலச்சரிவில் சிக்கி மடிகேரி தாலுகாவில் கல்லூர், மக்கந்தூர், ஜோடுபாலா, சம்பஜே உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்கள் தற்போது முகாம்களில் தங்கியிருந்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக அவர்கள் தங்களது கிராமங்களுக்கு சென்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் மணல் மூடிய பகுதியில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ேதாண்டி வீடுகளில் இருந்த வெள்ளி பொருட்கள், தங்க நகைகளை தேடி வருகிறார்கள். அதுபோல் சிலர் உருக்குலைந்த நிலையில் கார்கள், வாகனங்களை மீட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

அதுபோல் சாலை சீரமைப்பு பணிகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும் மழை வெள்ளம்-நிலச்சரிவால் உருக்குலைந்த குடகு மாவட்டத்தில் ஒரு மாதம் ஆகியும் இன்னும் வெள்ளத்தின் சுவடு மாறவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் வீடுகள் இன்னும் மணல் மூடி கிடக்கிறது. மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மண் அரிப்பால் பசுமை இழந்து பாலைவனமாக காட்சி தருகிறது. முக்கிய சாலைகளில் தான் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. குக்கிராமங்களில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் இன்னும் வேகமெடுக்கவில்லை. இதனால் குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் நடந்தே செல்லும் நிலை உள்ளது.

அதற்கு இன்னும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களும், வேலையில்லாமல் சிரமப்பட்டு வரும் காபி தோட்ட தொழிலாளர்களின் நிலையும் சாட்சி. வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.