மாவட்ட செய்திகள்

பா.ஜனதா ஆட்சியை பிடிக்க எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் கர்நாடக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவு + "||" + To catch up with the BJP Act with caution Amit Shah ordered to Karnataka leaders

பா.ஜனதா ஆட்சியை பிடிக்க எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் கர்நாடக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவு

பா.ஜனதா ஆட்சியை பிடிக்க எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் கர்நாடக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவு
கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால், பா.ஜனதா ஆட்சி அமைக்க எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என்று கர்நாடக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சியை எந்த விதமான பிரச்சினையும் இன்றி முன்னெடுத்து செல்ல ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா இருந்து வருகிறார். ஆனால் சித்தராமையாவின் பேச்சுக்கு முதல்-மந்திரி குமாரசாமியோ, துணை முதல்-மந்திரி பரமேஸ்வரோ மதிப்பு அளிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


அதே நேரத்தில் குமாரசாமி தன்னிச்சயைாக முடிவு எடுப்பதால், அவர் மீது சித்தராமையா அதிருப்தி அடைந்திருப்பதாகவும், கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சித்தராமையாவே முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது. அதே நேரத்தில் பெலகாவி மாவட்ட உட்கட்சி மோதல் காரணமாக 10 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில்் இருந்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களிைடயே உள்ள மோதலால் கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்து விடும் என்றும், மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேருவார்கள் என்றும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறி வருகிறார். இந்த நிலையில், மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் 10 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலக இருப்பதாகவும், மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கூட்டணி ஆட்சி தானாக கவிழும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால் உடனடியாக பா.ஜனதா ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கர்நாடக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எடியூரப்பாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமித்ஷா பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால் பா.ஜனதா தாமதம் செய்யாமல் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த விஷயத்தில் பா.ஜனதாவுக்கு மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படாதவாறு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் படியும், குறிப்பாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகளால் தான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாக இருக்க வேண்டும், அதில் பா.ஜனதாவின் தலையீடு இல்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அமித்ஷா கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏனெனில் பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டும் தேவை என்பதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது. அமித்ஷாவிடம் இருந்து வந்த உத்தரவால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்திருப்பதாகவும், ஆட்சியை பிடிக்க அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை எடியூரப்பா திடீரென்று கூட்டி இருப்பதாகவும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.