நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று உப்பள்ளி வருகை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்


நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று உப்பள்ளி வருகை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 6:57 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உப்பள்ளிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவா் பேசுகிறார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்காக வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கர்நாடகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதற்கட்ட பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உப்பள்ளிக்கு வருகைதர உள்ளார். இன்று மாலை 4 மணியளவில் உப்பள்ளி அருகே ஹெப்பூரு கிராசில் உள்ள கே.எல்.இ. மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். மேலும் சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் தலைமையில் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த கூட்டத்திற்காக கே.எல்.இ. மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் உப்பள்ளி, தார்வார், ஹாவேரி, பெலகாவி, உத்தரகன்னடாவை சேர்ந்த 2 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமருவதற்காக இருக்கைகள் போடப்பட்டு இருப்பதாகவும் பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வருகையால் கர்நாடக பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரதமா் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவார்கள் என்பதால் உப்பள்ளி மற்றும் கூட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story