மாவட்ட செய்திகள்

சித்தராமையாவுடன் குமாரசாமி செல்போனில் பேச்சுகூட்டணியில் விரிசலை தவிர்க்க சமரசம் + "||" + kumaraswamy with siddaramaiah Talk on cellphone

சித்தராமையாவுடன் குமாரசாமி செல்போனில் பேச்சுகூட்டணியில் விரிசலை தவிர்க்க சமரசம்

சித்தராமையாவுடன் குமாரசாமி செல்போனில் பேச்சுகூட்டணியில் விரிசலை தவிர்க்க சமரசம்
கூட்டணியில் விரிசலை தவிர்க்கும் முயற்சியாக எச்.விஸ்வநாத் விமர்சனம் தொடர்பாக சித்தராமையாவுடன் முதல்-மந்திரி குமாரசாமி செல்போனில் பேசினார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி பணியாற்றி வருகிறார். காங்கிரசை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாவார் என்று அவ்வப்போது கூறி வருகிறார்கள். பதிலுக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத், சித்தராமையா 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்தார், குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பெரிய திட்டங்களை அவர் அமல்படுத்தவில்லை என்று கூறினார்.

கூட்டணியில் விரிசல்

இதனால் கடும் கோபம் அடைந்த சித்தராமையா, எச்.விஸ்வநாத்துக்கு எதிராக கருத்துகளை பகிரங்கமாக கூறினார். சித்தராமையாவும், எச்.விஸ்வநாத்தும் பகிரங்க கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்த விரிசல் மேலும் அதிகரித்து கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்தராமையா நேற்று உப்பள்ளிக்கு சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு அவர் சென்றார்.

சந்தித்துக்கொள்ளவில்லை

அந்த ஓட்டலில் முதல்-மந்திரி குமாரசாமியும் தங்கியிருந்தார். சித்தராமையா குந்துகோல் தொகுதியிலும், குமாரசாமி சிஞ்சோலியிலும் பிரசாரம் செய்ய புறப்பட இருந்தனர். அப்போது இருவரும் சந்தித்து கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து பேசுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தாலும் கூட ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

அதே நேரத்தில் முதல்- மந்திரி குமாரசாமி, சித்த ராமையாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குமாரசாமி, “எச்.விஸ்வநாத் உங்களை விமர்சித்து பேசியிருக்கக்கூடாது. அவர் பேசிய பேச்சு குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அவரிடம் பேசுகிறேன். இனி இதுபோல் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறியதாக தெரிகிறது.

கவனம் செலுத்த வேண்டும்

அதற்கு மறுமுனையில் இருந்து சித்தராமையா, “கூட்டணி இருக்கும் நிலையில் எச்.விஸ்வநாத் கூறிய கருத்து சரியல்ல. இதுபற்றி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த செல்போன் பேச்சு 10 நிமிடங்கள் நீடித்தது.

சித்தராமையா, குமாரசாமி செல்போனில் பேசியதன் மூலம் கூட்டணியில் இருந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சு குறித்து கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் நிருபர்களிடம் கூறுகையில், “பிரசாரத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் ஒருவரையொருவர் சந்திக்க முடியவில்லை. அவர்கள் செல்போனில் பேசிக்கொண்டனர். கூட்டணி கட்சி தலைவர்களிடையே எந்த கருத்து வேறு பாடும் இல்லை” என்றார்.