மாவட்ட செய்திகள்

பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியா?முரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்திப்பால் பரபரப்பு + "||" + Is Janata Dal (S) alliance with BJP?

பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியா?முரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்திப்பால் பரபரப்பு

பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியா?முரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்திப்பால் பரபரப்பு
கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்தித்து பேசினார்.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பால் பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முரளிதரராவுடன் சந்திப்பு

கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு சுற்றுலாத்துறை மந்திரி சா.ரா.மகேஷ் (ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்) கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மூத்த பா.ஜனதா தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈசுவரப்பா ஆகியோரை பெங்களூரு கே.கே.விருந்தினர் மாளிகையில் சந்தித்தனர். இந்த சந்திப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் மந்திரி சா.ரா.மகேஷ் முதல்-மந்திரி குமாரசாமியின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார். இதனால் ஜனதாதளம்(எஸ்) கட்சி, காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து கொண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதா? அல்லது மந்திரி சா.ரா.மகேஷ் பா.ஜனதா கட்சியில் இணைகிறாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

உச்சக்கட்ட பரபரப்பு

ஆனால் இந்த சந்திப்பு எதேச்சையாக நடந்தது. இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று மந்திரி சா.ரா.மகேஷ் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மந்திரியுடன் கலந்துரையாடியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. பொது இடத்தில் சாதாரணமாக நடந்த சந்திப்பு தான் இது. இதை ஊடகங்கள் பரபரப்பான செய்தியாக மாற்ற வேண்டாம்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த சந்திப்பின்போது முரளிதரராவ் தனது பாதுகாவலர்களை அனுப்பிவிட்டு விருந்தினர் மாளிகையில் சா.ரா.மகேசை சந்தித்தார். இதனால் கர்நாடக அரசியல் பரபரப்பு மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

குமாரசாமி கருத்து

இந்த சந்திப்பு குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா தலைவர்களுடன் சா.ரா.மகேஷ் எதேச்சையாக சந்தித்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இந்த சந்திப்பு நடந்த கே.கே. விருந்தினர் மாளிகை, சுற்றுலா துறைக்கு உட்பட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கூட்டணியை கவிழ்க்க முயற்சிகள் நடந்தாலும், இந்த கூட்டணி பலமாக சென்று கொண்டிருக்கிறது. அரசை சுமுகமாக நடத்தவும், சட்டசபை கூட்டத்தொடரை அமைதியாக நடத்தவும் நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது ஜனதா தளம் (எஸ்) கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணியில் காங்கிரசை சேர்ந்த தரம்சிங் முதல்-மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென்று வாபஸ் பெற்று, பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தது. இதில், குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.