விஷம் வைத்து கொல்லப்பட்ட தெருநாய்களின் இறைச்சியை தின்ற 3 பெண் சிறுத்தைகள் செத்தன


விஷம் வைத்து கொல்லப்பட்ட தெருநாய்களின் இறைச்சியை தின்ற 3 பெண் சிறுத்தைகள் செத்தன
x
தினத்தந்தி 10 Sep 2019 9:30 PM GMT (Updated: 10 Sep 2019 5:26 PM GMT)

நஞ்சன்கூடு தாலுகாவில், விஷம் வைத்து கொல்லப்பட்ட தெருநாய்களின் இறைச்சியை தின்ற 3 பெண் சிறுத்தைகள் செத்துவிட்டன.

மைசூரு, 

நஞ்சன்கூடு தாலுகாவில், விஷம் வைத்து கொல்லப்பட்ட தெருநாய்களின் இறைச்சியை தின்ற 3 பெண் சிறுத்தைகள் செத்துவிட்டன. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாயி ஒருவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

3 சிறுத்தைகள் செத்தன

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹலல்லரே கிராமத்தில் வசித்து வருபவர் சென்னபசப்பா. விவசாயியான இவருக்கு அந்த கிராமத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் ஒரு விவசாய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் நேற்று காலையில் 3 சிறுத்தைகள் செத்துக்கிடந்தன. அவை ஒரு தாய் சிறுத்தையும், அதனுடைய 2 குட்டி சிறுத்தைகளும் ஆகும். சிறுத்தைகள் செத்துக் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக இதுபற்றி பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட ஓங்காரா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் வனத்துறையினர், அதிகாரி லோகேஷ் மூர்த்தி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு 3 சிறுத்தைகள் செத்துக்கிடந்தன. அவை 10 வயதான தாய் சிறுத்தை, 8 மாதம் மற்றும் 2 மாதங்களே ஆன 2 குட்டி பெண் சிறுத்தைகள் என வனத்துறையினருக்கு தெரியவந்தது. பின்னர் அவர்கள் இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

விஷம் வைத்து கொல்லப்பட்ட...

அதாவது விவசாய தோட்டத்தின் உரிமையாளரான சென்னபசப்பா தனது தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த தெருநாய்களை கொல்வதற்காக விஷம் கலக்கப்பட்ட இறைச்சியை அவற்றுக்கு உணவாக வைத்துள்ளார். அதை தின்ற 4 தெருநாய்கள் செத்துவிட்டன. இதையடுத்து அந்த 4 தெருநாய்களின் உடல்களையும் தோட்டத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் வீசியுள்ளார்.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து இரை தேடி குட்டிகளுடன் வெளியேறிய அந்த சிறுத்தை, விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்களின் இறைச்சியை தின்றுள்ளது. அதனுடன் சேர்ந்து அதன் குட்டிகளும் தின்றுள்ளன. இதன்மூலம் அந்த 3 சிறுத்தைகளும் உடல்நிலை பாதிக்கப்பட்டு செத்துள்ளது வனத்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

விவசாயியிக்கு வலைவீச்சு

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு கால்நடை டாக்டரை வரவழைத்தனர். கால்நடை டாக்டர், தாய் சிறுத்தை உள்பட 3 சிறுத்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தார். அப்போது அந்த சிறுத்தைகளின் உடலில் இருந்து சில உறுப்புகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த 3 சிறுத்தைகளின் உடல்களும் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விவசாயி சென்னபசப்பாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story