பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்துக்கு முயற்சி; முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் கைது


பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்துக்கு முயற்சி; முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் கைது
x
தினத்தந்தி 14 Jan 2020 12:00 AM GMT (Updated: 13 Jan 2020 4:07 PM GMT)

பல்லாரியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் கைது செய்யப்பட்டார். அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவரை போலீசார் கைது செய்திருந்தனர்.

பெங்களூரு, 

பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சோமசேகர் ரெட்டி. இவர், பல்லாரி டவுனில் கடந்த 3-ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. முஸ்லிம் சமூகத்தினரை எச்சரிக்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக சோமசேகர் ரெட்டி மீது பல்லாரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு எதிராக பெங்களூரு, பல்லாரியில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அத்துடன் போலீஸ் டி.ஜி.பி.யிடமும் சோமசேகர் ரெட்டி மீது காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்து உள்ளனர்.

அதே நேரத்தில் முஸ்லிம்களை எச்சரிக்கும் விதமாக பேசிய சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் தெரிவித்திருந்தார். இதையொட்டி பல்லாரி டவுனில் உள்ள சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சோமசேகர் ரெட்டி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பல்லாரிக்கு நேற்று காலையில் தனது ஆதரவாளர்களுடன் ஜமீர் அகமதுகான் சென்றார். ஆனால் பல்லாரி புறநகர் குடுத்தினி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜமீர் அகமதுகானையும், அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவரையும், ஆதரவாளர்களையும் குடுத்தினி போலீசார் கைது செய்து, அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். அப்போது போலீஸ் வாகனத்தை ஜமீர் அகமதுகானின் ஆதரவாளர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஜமீர் அகமதுகானை குடுத்தினி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு பதிலாக பி.டி.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்திவிட்டு போலீசார் விடுவித்தனர். பல்லாரி டவுனில் உள்ள சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஜமீர் அகமதுகான் எந்த விதமான அனுமதியும் பெறாத காரணத்தால், அவரை கைது செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் நிருபர்களிடம் கூறுகையில், "பல்லாரியில் அமைதியை கெடுக்க நான் வரவில்லை. சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சை கண்டித்தும், அவருக்கு எதிராக போராடுவதற்கும் தான் நான் இங்கு வந்தேன். நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனாக பல்லாரிக்கு வரவில்லை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட பல்லாரிக்கு வந்தேன்.

சோமசேகர் ரெட்டி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தேன். போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் நான் அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபட முயன்றேன். இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை," என்றார்.

Next Story