மாவட்ட செய்திகள்

வருகிற 5-ந்தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு + "||" + First curfew from 1st to 5th of September: Chief Minister Yeddyurappa announces after high level panel

வருகிற 5-ந்தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

வருகிற 5-ந்தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு முழு ஊரடங்கை அமல்படுத்தப்படும் என்றும், வருகிற 5-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரசின் ருத்ரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் இருந்தது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பசுமை மண்டலங்களில் இருந்தது. ஆனால், ஊரடங்கில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்தது.

தற்போது கர்நாடகத்தில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தற்போது மாநிலத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூரு தான் கொரோனாவின் கொரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. பெங்களூரு நகரில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று முன்தினம் வரை 82 பேர் பலியாகி உள்ளனர். நாள்தோறும் மாநிலத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தால், பெங்களூரு நகரில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டுகிறது. மேலும் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, கர்நாடக அரசை கவலை அடைய செய்துள்ளது.

தலைநகர் பெங்களூருவில் கொரோனா தனது கொடூர முகத்தை வெளிக்காட்ட தொடங்கியுள்ளது. இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா ஆதங்கம் அடைந்துள்ளார். பெங்களூரு நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நகரில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று குரல் எழுந்தது. ஆனால், அரசு தரப்பில் இருந்து பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூரு நகர அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று எடியூரப்பா திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூரு நகரில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூரு காவேரி இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அந்த வீட்டின் வளாகத்தில் உள்ள திறந்தவெளி புல்தரையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் எஸ்.ஆர்.விஸ்வநாத், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், கூடுதல் தலைமை செயலாளர் ரவிக்குமார், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் அனில்குமார், வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஒருபுறம் கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றும், இன்னொருபுறம் மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு வருகிற 5-ந் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைஅன்று மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அமலில் இருக்கும். வருகிற 10-ந் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படும்.

கர்நாடகத்தில் தற்போது இரவு ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. இதில் சிறிது மாற்றம் செய்து, இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் தக்காளி மொத்த மார்க்கெட்டில் மக்கள் நெரிசல் ஏற்படுவதை தடுக்க பிற பகுதிகளில் மொத்த தக்காளி மார்க்கெட் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை விரைவாக ஆஸ்பத்திரியில் சேர்க்க படுக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை 250 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் அமரர் ஊர்திகளின் எண்ணிக்கைை-யும் அதிகரிக்கப்படும்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கும் இடம் மற்றும் அந்த வாகனங்கள் பிரச்சினை இன்றி இயங்க போலீஸ் கட்டுப்பாட்டு அறை வயர்லெஸ் வசதியை பயன்படுத்திகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்படும்.

கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி மண்டல இணை கமிஷனர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் மாநகராட்சி கமிஷனர் மீது உள்ள பணிச்சுமை குறையும். டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க புதிதாக நியமிக்கப்பட்ட 180 டாக்டர்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கண்காணிப்பு மைய பொறுப்பாளர்களாக தாசில்தார்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

பெங்களூருவில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற அமைப்புகளின் கட்டிடங்களை கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே துறையிடம் இருந்து ரெயில் பெட்டிகள் கேட்டு பெற்று கொரோனா வார்டுகளாக மாற்றப்படும். கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். மேலும் பெங்களூருவில் புதிதாக மயான பூமியை அடையாளம் காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பினால், தங்கும் விடுதிகளில் வார்டுகள் அமைக்கப்படும். அந்த தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மந்திரி ஆர்.அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தற்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த தேர்வு முடிந்த பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். இன்றைய (நேற்று) கூட்டத்தில் 3 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம்.

மருத்துவ நிபுணர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டத்தை தனியார் மருத்துவமனைகள் ஏற்க வேண்டும். கொரோனா போன்ற யுத்த சூழ்நிலையில் அரசு சொல்வதை தனியார் மருத்துவமனைகள் கேட்க வேண்டும். அரசின் உத்தரவுகளை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றாவிட்டால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடைகள் மூடல்

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 5-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த நிலையில், கர்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் மது விற்பனை நேரத்தை குறைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது. அதாவது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மதுக்கடை திறக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின்போது, மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. ஏற்கனவே காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. நவிமும்பையில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல் - கமிஷனர் அறிவிப்பு
நவிமும்பையில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கமிஷனர் அன்னாசாகேப் மிசல் அறிவித்துள்ளார்.
2. கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதி; நாளை முழு ஊரடங்கு அமல்
சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.