மாவட்ட செய்திகள்

இந்தி தின விழாவுக்கு எதிராக கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது + "||" + Against the Hindi Day festival Kannada organization demonstration It happened in Bangalore

இந்தி தின விழாவுக்கு எதிராக கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது

இந்தி தின விழாவுக்கு எதிராக கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது
இந்தி தின விழாவுக்கு எதிராக கன்னட அமைப்பினர் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு,

இந்தி தின விழா நேற்று நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்‌ஷண வேதிகே, ஜெயகர்நாடகா உள்பட பல்வேறு கன்னட அமைப்புகள் பெங்களூருவில் உள்ள அனந்தராவ் சர்க்கிளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் கலந்து கொண்டவர்கள், இந்தி தின விழா நடத்தவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதில் கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா பேசும்போது கூறியதாவது:-


மத்திய அரசு இந்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே நிர்வாக மொழியாக வைத்திருப்பது, பிற மொழிகளுக்கு செய்யும் அநீதி ஆகும். இந்தியா பல்வேறு மொழிகள், கலாசாரத்தை கொண்ட நாடு. இதை காப்பாற்றினால் மட்டுமே கூட்டாண்மை நீடிக்கும். பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இந்தி தின விழா நடத்தக்கூடாது.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து மொழிகளையும் சமமாக பார்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து 22 மொழிகளையும் நிர்வாக மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு உள்பட அனைத்திலும் எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். இவ்வாறு நாராயணகவுடா பேசினார்.

அதுபோல் கன்னட சலுவளி கேந்திரா சமிதி அமைப்பினர், இந்தி தின விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் உருவப்பொம்மையை தீவைத்து எரித்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசின் மும்மொழி கொள்கையில் இந்தி இடம்பெற்று உள்ளது. இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகம், கர்நாடகத்தில் இந்தி வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்து சிலர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் கன்னடத்தின் மீது இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக கூறி, பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் முன்பு நேற்று ஜெய கர்நாடக அமைப்பினர் திடீரென போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ரெயில் நிலைய கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்துகளை, கன்னட அமைப்பினர் கற்களால் உடைத்தனர். இதில் எழுத்துகள் சிதறி விழுந்தன. இதுபற்றி அறிந்த சிட்டி ரெயில் நிலைய போலீசார் அங்கு சென்று கன்னட அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கன்னடத்தின் மீது இந்தி மொழியை ஒருபோதும் திணிக்க விடமாட்டோம் என்று கூறினர். பின்னர் அவர்களை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் ரெயில் நிலையத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்தி எழுத்துகளை கன்னட அமைப்பினர், கற்களால் உடைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.