மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்: வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆணவ கொலை செய்தது அம்பலம் - தந்தை உள்பட 3 பேர் கைது + "||" + Sudden twist in college student mysterious death case: Arson committed for falling in love with another caste boy - 3 people including father were arrested

கல்லூரி மாணவி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்: வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆணவ கொலை செய்தது அம்பலம் - தந்தை உள்பட 3 பேர் கைது

கல்லூரி மாணவி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்: வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆணவ கொலை செய்தது அம்பலம் - தந்தை உள்பட 3 பேர் கைது
கல்லூரி மாணவி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. வேறு சாதி வாலிபரை காதலித்ததால் அந்த இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராமநகர்,

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கூடூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெட்டேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகள் ஹேமலதா(வயது 19). இவர் மாகடியில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்த நிலையில் ஹேமலதா, பெட்டேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதி வாலிபரான புனித் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த கிருஷ்ணப்பாவும் அவரது குடும்பத்தினரும், புனித்துடனான காதலை கைவிடும்படி ஹேமலதாவிடம் கூறி உள்ளனர். ஆனால் அதற்கு ஹேமலதா மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி ஹேமலதா வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து கடந்த 9-ந் தேதி ஹேமலதாவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் அவரது குடும்பத்தினர் கூடூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான ஹேமலதாவை தேடிவந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பெட்டேஹள்ளி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் அரை நிர்வாண நிலையிலும், உடல் அழுகிய நிலையிலும் ஹேமலதா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஹேமலதாவை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து உடலை மாந்தோப்பில் வீசிச்சென்றது தெரியவந்தது.

ஹேமலதா அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதற்கிடையே ஹேமலதாவை அவரது காதலன் புனித் தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்து விட்டதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹேமலதாவை கொலை செய்தவர்களை கைது செய்ய, மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சீமந்த்குமார் சிங் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஹேமலதா, வேறு சாதி வாலிபரான புனித்தை காதலித்ததும், அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஹேமலதாவின் தந்தை கிருஷ்ணப்பாவிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து கிருஷ்ணப்பாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் வேறு சாதி வாலிபரான புனித்தை காதலித்ததால் ஹேமலதாவை ஆணவ கொலை செய்ததை கிருஷ்ணப்பா ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஹேமலதாவின் அத்தை மகனான யோகேஷ்(21), 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணப்பாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது வேறு சாதி வாலிபரான புனித்தை, ஹேமலதா காதலித்து வந்தது பற்றி அறிந்த கிருஷ்ணப்பா, காதலை கைவிடும்படி ஹேமலதாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஹேமலதா மறுக்கவே ஆத்திரம் அடைந்த கிருஷ்ணப்பா, ஹேமலதாவை கொலை செய்ய முடிவு செய்து உள்ளார். இதுபற்றி அவர் தனது சகோதரியின் மகனான யோகேசிடமும், உறவினரான 17 வயது சிறுவனிடமும் கூறியுள்ளார். இதற்கு அவர்கள் 2 பேரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து கடந்த 8-ந் தேதி ஹேமலதாவை, மாந்தோப்பிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து ஆணவ கொலை செய்ததும் அம்பலமானது. மேலும் கொலை பழியை புனித் மீது போட முடிவு செய்து உள்ளனர்.

அதன்படி புனித்தும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஹேமலதாவை கற்பழித்து கொலை செய்து விட்டதாக யோகேஷ் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இப்படி செய்தால் புனித்தை போலீசார் கைது செய்து விடுவார்கள். நாம் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் என்று 3 பேரும் நினைத்து உள்ளனர். ஆனாலும் போலீசார் 3 பேரையும் கைது செய்து உள்ளனர்.

வேறு சாதி வாலிபரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் ராமநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.