மாவட்ட செய்திகள்

2ஏ இடஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்தி, பஞ்சமசாலி சமூகத்தினர் பிரமாண்ட மாநாடு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர் + "||" + Mass Conference of Panchamasali Community, urging 2A reservation Millions gathered at the Bangalore Palace Grounds

2ஏ இடஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்தி, பஞ்சமசாலி சமூகத்தினர் பிரமாண்ட மாநாடு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்

2ஏ இடஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்தி, பஞ்சமசாலி சமூகத்தினர் பிரமாண்ட மாநாடு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்
2ஏ இடஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்தி பஞ்சமசாலி சமூகத்தினர் நேற்று பிரமாண்ட மாநாடு நடத்தினார்கள். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பிரமாண்ட மாநாடு
வீரசைவ-லிங்காயத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கூடலசங்கமத்தில் இருந்து பெங்களூரு வரை அந்த சமூகத்தை சேர்ந்த மடாதிபதியான ஜெயமிருதஞ்சனேய சுவாமி, வசனாந்த சுவாமி தலைமையில் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தனர். 708 கிலோ மீட்டர் பாதயாத்திரை நேற்று முன்தினம் பெங்களூரு வந்தடைந்தது.

இதையடுத்து, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பிரமாண்ட மாநாடு நடத்தினார்கள். இந்த மாநாட்டு மடாதிபதி ஜெயமிருதஞ்சனேய சுவாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொள்ள கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் அந்த சமூகத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அரண்மனை மைதானத்திற்கு திரண்டு வந்திருந்தார்கள்.

இடஒதுக்கீடு கேட்டு கோஷங்கள்
அதாவது பஞ்சமசாலி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பாகல்கோட்டை, பீதர், யாதகிரி, கலபுரகி, விஜயாப்புரா, கொப்பல், பல்லாரி, ஹாவேரி, பெலகாவி, தாா்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் அரண்மனை மைதானத்திற்கு திரண்டு வந்திருந்தார்கள். அரண்மனை மைதானம் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. குறிப்பாக வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவே அரண்மனை மைதானத்திற்கு வந்திருந்தார்கள்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் தங்களது சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். இந்த மாநாட்டில் அந்த சமூகத்தை சேர்ந்த மடாதிபதி ஜெயமிருதஞ்சனேய சுவாமி பேசியதாவது:-

போராட்டம் தொடரும்
பஞ்சமசாலி சமூகத்தினர் தற்போது 3பி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 3பி பட்டியலில் இருந்து 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் பஞ்சமசாலி சமூக மக்களின் கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கை நேற்றோ, இன்றோ விடுக்கப்பட்டது அல்ல. பல ஆண்டுகளாக நமது சமூக மக்கள் 2ஏ இடஒதுக்கீடுக்காக போராடி வருகிறாா்கள். கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதத்தில் பஞ்சமசாலி சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இதனால் கடந்த மாதம் (ஜனவரி) கூடலசங்கமத்தில் இருந்து பெங்களூருவுக்கு பாதயாத்திரை நடத்தி, இன்று (அதாவது நேற்று) நமது கோரிக்கையை வலியுறுத்தி ஒன்று கூடியுள்ளோம்.
நமது சமூகத்திற்கு ஜனநாயக முறைப்படி நியாயம் கிடைக்க 708 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்ட ஒரு சமூகம் இருக்கும் எனில், அது பஞ்சமசாலி சமூகமாகத்தான் இருக்க முடியும். 

இடஒதுக்கீடு கேட்டு நாம் நடத்தும் இந்த போராட்டம் நியாயமானது. முதல்-மந்திரி எடியூரப்பா நினைத்தால், நமது சமூகத்திற்கு இடஒதுக்கீடு கிடைக்கும். வீரசைவ-லிங்காயத் சமூகத்தின் தலைவர் எடியூரப்பா. நமது சமூகத்தின் சார்பில் எடியூரப்பாவுக்கு எப்போதும் ஆதரவு உண்டு. 15 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்களை நமது சமூகத்தின் மூலம் கொடுத்து எடியூரப்பா அரசு திடமாக இருக்க செய்துள்ளோம். பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்கியே தீர வேண்டும். இடஒதுக்கீடு வழங்கும் வரை போராட்டம் தொடரும். மந்திரிகளின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரிகள் பங்கேற்பு
பஞ்சமசாலி சமூகம் சார்பில் நேற்று நடந்த பிரமாண்ட மாநாட்டில் மந்திரிகள் முருகேஷ் நிரானி, சி.சி.பட்டீல், பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பசனகவுடா பட்டீல் யத்னால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர், அரவிந்த் பெல்லட், மடாதிபதிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் போராட்டத்தை கைவிடும் படியும், பஞ்சமசாலி சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். ஆனால் மந்திரிகளின் சமாதானத்தை கேட்க மடாதிபதிகள் மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து, அரண்மனை மைதானத்தில் இருந்து விதானசவுதாவை முற்றுகையிடுவதற்காக மடாதிபதி தலைமையில் அந்த சமூக மக்கள் திரண்டனர்.

சுதந்திர பூங்காவில்...
ஆனால் விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விதானசவுதாவுக்கு செல்ல மடாதிபதி உள்ளிட்டோருக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. சாளுக்கியா சர்க்கிள் அருகே மடாதிபதி உள்ளிட்டோரை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தை வெற்றி பெற்றதை தொடர்ந்து, விதானசவுதாவை முற்றுகையிடும் போராட்டத்தை அந்த சமூகத்தினர் கைவிட்டனர்.

பின்னர் சுதந்திர பூங்காவுக்கு பஞ்சமசாலி சமூகத்தினர் புறப்பட்டு சென்றனர். சுதந்திர பூங்காவில் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை மடாதிபதி தலைமையில் பஞ்சமசாலி சமூகத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணிவரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி
பஞ்சமசாலி சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு நடத்திய பிரமாண்ட மாநாடு மற்றும் அரண்மனை மைதானத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு பாதயாத்திரை சென்றதால், பெங்களூரு நகரில் நேற்று பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.மாநாட்டையொட்டி பெங்களூருவில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.