மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் காங்கிரசின் பாதயாத்திரை தற்காலிக நிறுத்தம் + "||" + congress padayatra cancel

கர்நாடகத்தில் காங்கிரசின் பாதயாத்திரை தற்காலிக நிறுத்தம்

கர்நாடகத்தில் காங்கிரசின் பாதயாத்திரை தற்காலிக நிறுத்தம்
மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி 4 நாட்களாக நடைபெற்று வந்த காங்கிரசின் பாதயாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரு: மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி 4 நாட்களாக நடைபெற்று வந்த காங்கிரசின் பாதயாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் பாதயாத்திரை

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9,500 கோடி செலவில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கை தற்போது காவிரி நிர்வாக ஆணையத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் மேகதாது திட்டத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

இதில் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி கடந்த 9-ந் தேதி மேகதாதுவில் பாதயாத்திரையை தொடங்கியது. இந்த பாதயாத்திரையை தடுக்கும் விதத்தில் கர்நாடக அரசு ராமநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த தடை உத்தரவை மீறி காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டப்படி பாதயாத்திரையை தொடங்கினர். ஆனால் போலீசார் அந்த பாதயாத்திரையை தடுக்கவில்லை,

ஐகோர்ட்டு கண்டனம்

அந்த பாதயாத்திரையில் சமூக விலகலை பின்பற்றவில்லை. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒருபுறம் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் காங்கிரசின் பாதயாத்திரைக்கு தடை விதிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட கோரி வக்கீல் சந்திர பிரசாத் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த அமர்வு மாநில அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியது. கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் பாதயாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கியதா?, பாதயாத்திரையை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அந்த அமர்வு எழுப்பியது. மேலும் மாநில அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனத்தை தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் காங்கிரசும் விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக அரசு தடை

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் மாலை மூத்த மந்திரிகள், தலைமை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரசின் பாதயாத்திரைக்கு தடை விதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தலைமை செயலாளர் ரவிக்குமார், காங்கிரசின் பாதயாத்திரைக்கு தடை விதித்து அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டார். இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்கள் பாதயாத்திரையை முடித்து கொண்டு நேற்று முன்தினம் இரவு ராமநகருக்கு வந்தடைந்தது. அங்கு டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கினர். இதற்கிடையே ராமநகர் மாவட்ட போலீசார், பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள உத்தரவு குறித்து டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு வழங்க கனகபுராவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு இருந்த டி.கே.சிவக்குமார் போலீசார் வழங்கிய நோட்டீசை பெற மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த நோட்டீசு அவரது வீட்டு சுவரில் ஒட்டிவிட்டு போலீசார் சென்றுவிட்டனர்.

பாதயாத்திரை நிறுத்தம்

மேலும் பாதயாத்திரையை தொடங்கினால் அவர்களை கைது செய்ய 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ராமநகரில் குவிக்கப்பட்டு இருந்தனர். கைது செய்ய வசதியாக 10-க்கும் மேற்பட்ட பஸ்களை தயார் நிலையில் நிறுத்தி இருந்தனர். வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் பாதயாத்திரை நேற்று 11 மணி ஆகியும் தொடங்கப்படவில்லை. காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டி.கே.சிவக்குமாரை தொடர்பு கொண்டு, தற்போது கொரோனா பரவி வருவதால் இந்த நேரத்தில் பாதயாத்திரை நடத்துவது சரியாக இருக்காது, அதனால் பாதயாத்திரையை தற்காலிகமாக நிறுத்தும்படி அறிவுறுத்தினார். ராகுல் காந்தியின் இந்த உத்தரவை அடுத்து நேற்று பகல் 12.30 மணியளவில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களின் பாதயாத்திரையை தற்காலிகமாக நிறுத்துவதாக டி.கே.சிவக்குமார் அறிவித்தார்.

பரபரப்பான சூழல்

அதே நேரத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு ராமகநரில் இருந்து தற்போது திட்டமிட்டுள்ளபடி பாதயாத்திரையை தொடங்கி பெங்களூருவில் நிறைவு செய்வோம் என்று அவர் அறிவித்துள்ளார். காங்கிரஸ் பாதயாத்திரையை நிறுத்துவதாக அறிவிக்கும் முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடிதம் மூலம் பாதயாத்திரையை நிறுத்துமாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை கேட்டுக்கொண்டார்.