ஹாசனில் தொடர் அட்டகாசம் செய்து வந்த மேலும் ஒரு காட்டு யானை பிடிபட்டது


ஹாசனில் தொடர் அட்டகாசம் செய்து வந்த மேலும் ஒரு காட்டு யானை பிடிபட்டது
x

ஹாசனில் தொடர் அட்டகாசம் செய்து வந்த மேலும் ஒரு காட்டு யானையை வனத்துறையினர் ‘கும்கி’ யானைகள் உதவியுடன் பிடித்தனர்.

ஹாசன்:

காட்டு யானைகள் அட்டகாசம்

ஹாசன் மாவட்டத்தில் சக்லேஷ்புரா, பேளூர், ஆலூர் ஆகிய தாலுகாக்கள் வனப்பகுதி நிறைந்த பகுதியாகும். இந்த தாலுகாக்களில் நிரந்தரமாக காட்டு யானைகளின் அட்டகாசம் இருந்து வருகிறது. வனத்துறையினர் காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும், அவை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த காட்டு யானைகளை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

யானை பிடிபட்டது

இந்த கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் காட்டு யானைகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி சக்லேஷ்புரா தாலுகாவில் 8 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அன்றைய தினம் உதயவாரா பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு காட்டு யானையை வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் பிடித்தனர். அதன் பிறகும் காட்டு யானையை பிடிக்கும் ஆபரேஷனை வனத்துறையினர் தொடர்ந்தனர்.

மேலும் ஒரு யானை

இந்த நிலையில் நேற்று ஆலூர் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் பீமா, ஹர்ஷா, ஹரீஷா, தனஞ்ஜெயா, மகேந்திரா உள்ளிட்ட 8 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் பெம்பலூர் பகுதியில் சுற்றித்திரிந்த மற்றொரு காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கும்கி யானைகள் உதவியுடன் கயிறு கட்டி காட்டு யானையை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அந்த காட்டு யானையை வனத்துறையினர் அங்கிருந்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். தொடர் அட்டகாசம் செய்து வந்த 2 யானைகள் பிடிபட்டுள்ளதால் அந்தப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story